Monday, June 4, 2012

தமிழக கடற்பகுதியில் சிக்கிய இலங்கை மீனவர்கள் படகு விடுவிப்பு!

Monday, June, 04, 2012
புதுவை::தமிழக கடற்பகுதியில் சிக்கிய இலங்கை மீனவர்கள் படகு நேற்று விடுவிக்கப்பட்டது.

இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நாகப்பட்டினம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த டிசம்பர் மாதம் கடலோர காவல்படையினால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டு புதுச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து முதலியார்பேட்டை பொலிஸ் இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கைதான மீனவர்கள் புதுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் தங்களை விடுவிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய உள்துறை அதிகாரிகள் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டனர். அதன்படி அவர்களும் விடுவிக்கப்பட்டனர். இருந்தபோதிலும் அவர்கள் வந்த படகுகள் விடுவிக்கப்படாமல் புதுச்சேரியிலேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே மீனவர்கள் வந்த கப்பலையும் தரும்படி இலங்கை அரசு உள்துறைக்கு கடிதம் அனுப்பியது. இதற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து இலங்கை உள்துறை அதிகாரிகள் நேற்று புதுச்சேரி வந்தனர். அவர்களிடம் இலங்கை மீனவர்களின் கப்பலை தாசில்தார் ரமேஷ், இன்ஸ்பெக்டர் மாறன் ஆகியோர் வழங்கினார்கள்

No comments:

Post a Comment