
Tuesday, June, 12, 2012யாங்கூன்::மியான்மர் நாட்டில், ரகின் மாகாணத்தில், முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டுள்ளதால், அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில், சமீபகாலமாக, ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. வீட்டுக் காவலில் பல ஆண்டு காலம் அடைக்கப்பட்டிருந்த ஜனநாயக தலைவர் அவுங் சான் சூச்சி, தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.,யாகியுள்ளார்.இதையடுத்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை அகற்ற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளன.இந்நிலையில், வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராகின் மாகாணத்தில், கடந்த சில வாரங்களாக, முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டுள்ளது.ராகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த, 8 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இவர்கள், மியான்மரில் குடியுரிமை கேட்டு, போராடி வருகின்றனர். சட்ட விரோதமாக குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்க, மியான்மர் அரசு மறுத்து விட்டது.இதற்கிடையே, முஸ்லிம்களின் குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட்டதாக கூறி, கடந்த வாரம், பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதில், ஏழு பேர் பலியாயினர். இதையடுத்து, மவுங்தா பகுதியில், அவசர நிலை அறிவிக்கப்பட்டு, காலை முதல் இரவு வரை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பதட்டமான சூழல் இங்கு நிலவுவதால், ஐ.நா., அமைப்பின் ஊழியர்கள், 44 பேர், பாதுகாப்பு கருதி, மவுங்தா பகுதியிலிருந்து நேற்று வெளியேறி, யாங்கூன் நகருக்கு சென்று விட்டனர்.
No comments:
Post a Comment