Monday, June, 04, 2012இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அண்மைக்காலமாக திட்டமிட்ட அடிப்படையில் நாட்டின் நிதிக் கட்டமைப்பை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு மத்திய வங்கி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகலவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
த பினான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வைப்புகள் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிதிக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு நீண்டகால அடிப்படையிலன்றி, குறுங்கால நன்மைகளை மாத்திரம் கிடைக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடப் போவதில்லை என அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய முதலீட்டுக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகள் மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் சேமலாப நிதியம் தனது முதலீட்டுத் திட்டங்களை தீர்மானிப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகின் சில நாடுகளில் பாரிய நிதி நெருக்கடிகள் நிலவியபோதிலும், இலங்கையின் பொருளாதாரம் சிறந்த மட்டத்திலேயே இருப்பதாகவும் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரமும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வீழ்ச்சியடையுமா என்ற நப்பாசை கொண்டவர்கள், மத்திய வங்கி ஆளுநர் உட்பட பொருளாதார துறை சார்ந்த நிபுணர்களை கீழ்த்தரமாக தூற்றுகின்ற முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை தீக்கிரையாக்கி அரசாங்கத்திற்கும், மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்திய சேதத்திற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல்தர வர்த்தகர்களை சந்தித்து, பொருளாதாரத்தின் எதிர்கால பயணத்திற்குப் பங்காற்றியுள்ள சிலரை குற்றங்களில் சிக்கவைப்பதற்கான கருத்துக்களை வெளியிடுமாறு கோரியுள்ளனர் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொள்கைகள் அற்ற அத்தகைய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரயத்தனங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி, தேசதுரோக முயற்சிகளை தோற்கடிக்க வேண்டியுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment