Monday, June, 18, 2012காபூல்::ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு இந்தியா அடிபணியாதது வரவேற்கத்தக்கது என்று தலிபான்கள் கூறியுள்ளனர். ஆப்கனை தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டன. 2001ம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. எனினும், அமெரிக்க படைகள் தொடர்ந்து அங்கு முகாமிட்டுள்ளன. இந்நிலையில், வரும் 2014ம் ஆண்டுக்குள் முழு பாதுகாப்பு பொறுப்பையும் ஆப்கன் ராணுவம், போலீசிடம் ஒப்படைத்து விட்டு அமெரிக்கா வெளியேற திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில் கத்தாரில் தலிபான்கள் அலுவலகம் திறக்கவும், அங்கு சமரச பேச்சு நடத்தவும் அமெரிக்க முயற்சி மேற்கொண்டது.
இதுதொடர்பாக தலிபான் - ஆப்கன் அரசு - அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடந்தது. இதில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில், 2014ம் ஆண்டுக்குள் அமெரிக்க படைகள் விலகி கொண் டால், அந்த நேரத்தில் இந்திய ராணுவத்தினரை ஆப்கனில் அதிகமாக குவிக்க வேண்டும். ஆப்கன் பாதுகாப்பு பொறுப்பில் இந்தியா இடம்பெற வேண்டும். ஏனெனில், பாக். தீவிரவாதிகளுக்கும் ஆப்கன் தலிபான்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 2014ம் ஆண்டுக்கு பின் தலிபான்களின் பிடியில் ஆப்கன் சிக்கினால், அது இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் என்று அமெரிக்கா கூறிவருகிறது. இதற்கு இந்தியா உறுதியான பதில் எதுவும் கூறவில்லை.
இதை தலிபான் தீவிரவாதிகள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் ராய்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆப்கன் விஷயத்தில் மற்ற நாடுகள் தலையிடுவதை தலிபான்கள் விரும்பவில்லை. ஆப்கன் பாதுகாப்பில் அதிகமாக ஈடுபட வேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா நிர்பந்தப்படுத்தி வருகிறது. இதற்காக 3 நாள் இந்தியாவில் தங்கி அமெரிக்க ராணுவ அமைச்சர் லியோன் பனேட்டா தீவிர முயற்சி மேற்கொண்டார்.
அமெரிக்காவின் சுமையை இந்தியா மீது இறக்கிவைத்துவிட்டு ஆப்கனில் இருந்து வெளியேற பனேட்டா முயற்சித்தார். எனினும், நிர்பந்தத்துக்கு இந்தியா அடிபணியவில்லை. எந்த உறுதியும் அளிக்கவில்லை. இது வரவேற்கத்தக்கது. ஆப்கன்- இந்தியா இடையே நீண்ட உறவு உள்ளது. ஆப்கன் மக்களின் உணர்வுகளை இந்தியா புரிந்து வைத்துள்ளது. இந்த பிராந்தியத்தில் இந்தியா முக்கியமான நாடு. இவ்வாறு ஜபியுல்லா முஜாகித் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்திய உளவுத் துறை முன்னாள் தலைவர் விக்ரம் சூத் கூறுகையில், தலிபான்களின் பாராட்டு இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுப்பது போல் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment