Wednesday,June,13,2012சென்னை::இலங்கைக்கான அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர் வரும் 29 ஆம் திகதி கொழும்பு செல்ல உள்ளதாக தெரியவருகிறது.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இலங்கைப் படைகளினால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு மற்றும் திருகோணமலையிலுள்ள இந்திய எண்ணெய்க் குதங்களை இலங்கை மீளப்பெறவுள்ளமை தொடர்பில் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ள இந்தச் சம்பவங்கள் குறித்து இந்திய அரசின் அதிருப்தியையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இதர அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர் மேனன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார்.
சிவ்சங்கர் மேனனின் கொழும்புப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதொன்றல்ல எனவும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய பேச்சுகளை நடத்தவே அவர் அவசரமாக இலங்கை செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையில் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் இலங்கை அரசு மீளப்பெற உத்தேசித்து வருகின்றது என கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
கடந்த 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில், பெற்றோலிய வள அமைச்சு இந்தக் குதங்களை 33 ஆண்டுகள் குத்தகைக்கு லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது.
இவ்வாறு செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டில் குறைபாடுகள் இருக்கின்றன எனவும், ஆனால், அவற்றைக் கருத்திற் கொண்டு இந்தக் குதங்களை மீளப்பெற அரசு ஆராய்ந்து வருகிறது என்றும் கடந்த வாரம் வெளிவந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்தப் பின்னணியின் கீழ் அவசர அவசரமாகக் கொழும்புவரும் சிவ்சங்கர் மேனன், இந்த விவகாரம் தொடர்பிலும் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார் என தெரியவருகிறது.
No comments:
Post a Comment