Wednesday, June 13, 2012

ஜனாதிபதி வேட்பாளர் யார்? கூட்டணி தலைவர்களுடன் சோனியா ஆலோசனை!

Wednesday,June,13,2012
புதுடெல்லி::காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை சோனியா காந்தி இன்று முடிவு செய்கிறார். இதுதொடர்பாக மம்தா உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். பிரணாப் முகர்ஜி வேட்பாளராக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 19ம் தேதி நடக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து கடந்த சில நாட்களாகவே கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஆலோசனை நடத்தி வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியை மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் நிலையை எடுத்துக் கூறினார். கூட்டணியில் உள்ள சரத்பவார், மம்தா ஆகியோரிடமும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடமும் முதல்கட்ட ஆலோசனையை காங்கிரஸ் முடித்துவிட்டது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டிய நிலை காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த டெல்லி வருமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு சோனியா அழைப்பு விடுத்தார். அதை ஏற்று நேற்றிரவே மம்தா டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று மாலை சோனியா காந்தியை மம்தா சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு மீண்டும் முலாயம்சிங்கை சந்திக்கிறார். இருவரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தங்கள் நிலையை அறிவிப்பார்கள் என தெரிகிறது.

காங்கிரஸ் சார்பில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அல்லது துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தெரிகிறது. மேலும் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி பெயரும் பரிசீலனையில் உள்ளது. காங்கிரசுக்கு ஹமீத் அன்சாரியை நிறுத்த விருப்பம். ஆனால் பெரும்பாலான கட்சிகள் பிரணாப் முகர்ஜி பெயரை பரிந்துரைப்பதால் இதுபற்றி கூட்டணி கட்சிகளிடம் கலந்து பேசி சோனியா இன்று முடிவு செய்கிறார். இன்று மாலையோ அல்லது நாளையோ காங்கிரஸ் வேட்பாளர் பெயரை சோனியா அறிவிப்பார் என தெரிகிறது. முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு அதிமுக, பிஜு ஜனதாதளம் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. பாஜ மூத்த தலைவர் அத்வானி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, இடதுசாரி கட்சித் தலைவர்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகனின் தாயார் விஜயலட்சுமி மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து சங்மா ஆதரவு திரட்டி வருகிறார். பாஜ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை இன்னும் தெரியவில்லை. சோனியா வேட்பாளரை அறிவித்த பிறகுதான் இந்த இரு கட்சிகளின் நிலை தெரியவரும்.

No comments:

Post a Comment