Monday, June, 04, 2012புதுடில்லி::பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, அரசியல் ரீதியான சவால்கள் போன்ற விஷயங்களில், காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், இன்று டில்லியில் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு, கட்சித் தலைவர் சோனியா தலைமை வகிக்கிறார். பிரதமர் மன்மோகன்சிங்கும் இதில் பங்கேற்கிறார். செயற்குழு உறுப்பினர்களைத் தவிர, காங்., கட்சியின் மாநிலத் தலைவர்களும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். செயற்குழு மாற்றி அமைக்கப்பட்ட பின், நடக்கும் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தின் முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தில், சட்டசபைத் தேர்தல் தோல்வி, பொருளாதார நிலைமை ஆகியவை குறித்து விவாதிக்கப் படவுள்ளது. குறிப்பாக, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப் படவுள்ளது.மேலும், தேர்தல் தோல்வி குறித்து ஆய்வுசெய்து, அந்தோணி தலைமையிலான உயர்மட்டக் குழு தாக்கல் செய்த அறிக்கை குறித்தும், அதில் பரிந்துரைக்கப்பட்ட விஷயங்கள் குறித்தும், விவாதிக்கப் படவுள்ளன. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைப்பது குறித்த முடிவும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படலாம்.
No comments:
Post a Comment