Sunday, June, 17, 2012புதுடெல்லி::ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து முதலில் எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாடி உள்பட பல்வேறு கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது.
ஜனாதிபதி தேர்தலில் கருத்தொற்றுமை ஏற்படுத்தும் வகையில் பிரணாப்புக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கோரிக்கை வைத்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பா.ஜ. தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அத்வானியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார். கூட்டணி தலைவர்களுடன் விவாதித்து முடிவு அறிவிப்பதாக சுஷ்மா தெரிவித்தார்.
பிரணாப்புக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவளிக்கும் என செய்திகள் வெளியாயின.
இதற்கு பிரதிபலனாக துணை ஜனாதிபதி பதவியை பா.ஜ.வை சேர்ந்த ஒருவருக்கு விட்டுத்தர காங்கிரசிடம் கோரிக்கை வைக்கப்படலாம் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக முதன் முதலில் அறிவித்த பி.ஏ.சங்மாவை ஆதரிக்க தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முடிவு எடுத்திருப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. அப்போது யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.
இதற்கிடையில் அப்துல் கலாம்தான் அடுத்த ஜனாதிபதி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார். தேர்தலுக்குள் நிலைமை மாறும் என அவர் தெரிவித்துள்ளார். மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு பின்னர் சோனியா பக்கம் தாவிய சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஒரு துரோகி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment