Monday, June 18, 2012புதுடெல்லி::ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? பிரணாப் முகர்ஜியா...கலாமா...சங்மாவா...? இந்த கேள்விக்கு விடை காண முடியாமல் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உச்சகட்ட திணறலில் உள்ளது. முடிவெடுத்தால் பிளவு ஏற்படுமோ என்று, பாதியில் முடிந்தது கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். அவருக்கு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் இடதுசாரிகள் ஆதரவு கிடைக்கும் என்று உறுதியாக தெரிகிறது.
ஏற்கனவே, சங்மா பெயரை அதிமுக, பிஜூ ஜனதா தளம் கட்சிகள் அறிவித்து அவருக்காக ஆதரவு திரட்டி வந்தன. கடந்த வாரம் சென்னை வந்த பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். சங்மாவை ஆதரிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கை, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதிய வேட்பாளரை நிறுத்துவது போன்றவை குறித்து கூட்டணி தலைவர்கள் ஆலோசிப்பார்கள் என்று அத்வானி அப்போது கூறியிருந்தார். ஏற்கனவே, கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தே.ஜ. கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் நிலைமைகளை பொறுத்திருந்து முடிவு எடுக்கப்போவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், கலாமை ஆதரிக்க வேண்டும் என்று மம்தா பிடிவாதமாக முயற்சி செய்து வருகிறார். அவர் காங்கிரஸ் அணியில் இருந்து வெளியேறி மீண்டும் தேஜ கூட்டணியில் சேருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படியானால், கலாமை ஆதரிக்கலாமா என்றும் கூட தேஜ அணியில் உள்ள சிலரின் மனதில் இருந்து வந்தது.
ஐ.மு. கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், தங்கள் ஆதரவு யாருக்கு என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் தேஜ கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு: இனியும் முடிவை தள்ளிப்போட முடியாது என்ற இக்கட்டான நிலையில், டெல்லியில் அத்வானி வீட்டில் தே.ஜ. கூட்டணி தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 2014 மக்களவை தேர்தலை மனதில் கொண்டு சங்மாவை ஆதரிக்கலாம் என்று பா.ஜ.வில் அத்வானி உட்பட பல தலைவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளத்தை தோழமையாக்கி கொள்ளலாம் என்று இவர்கள் கருதுகின்றனர்.
ஆனால், பா.ஜ.வில் உள்ள வேறு சிலர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து விட்டு அதற்கு பதிலாக துணை ஜனாதிபதி பதவியை பா.ஜ.வுக்கு பெறலாம் என்று கூறுகின்றனர். பிரணாப் தான்: இது தவிர, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறது. வெற்றி வாய்ப்பு உள்ள பிரணாப் முகர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவது தேவையற்றது என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவும் கூறுவதால் பா.ஜ.வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சிவசேனா புறக்கணிப்பு: பிரணாப்பை ஆதரிக்க தே.ஜ. கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனாவும் விரும்புகிறது. வேறு வேட்பாளரை தேர்வு செய்ய தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் நேற்றைய கூட்டத்தை சிவசேனா புறக்கணித்தது.
பிரணாப்புக்கு எதிராக வேட்பாளர் நிறுத்தப்படுவதை சிவசேனா எதிர்க்கிறதா? என்று கேட்டதற்கு, ‘‘இது குறித்து பால் தாக்கரே முடிவு செய்வார்‘‘ என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராத் தெரிவித்தார். கடந்த முறை ஜனாதிபதி தேர்தலில் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதிபாவை சிவசேனா ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், வேட்பாளர் தேர்வு தொடர்பாக தே.ஜ. கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. இதனால், நேற்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. பின்னர் பேட்டியளித்த சரத் யாதவ் கூறுகையில், ‘‘தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சரியான முடிவு எடுக்க மேலும் ஆலோசனை தேவைப்படுகிறது. தே.ஜ. கூட்டணி முதல்வர்களுடன் அத்வானி பேசுவார்’’ என்றார்.
இதனிடையே, டெல்லியில் பேட்டியளித்த பா.ஜ. செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன், ‘’ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன. இன்னும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது வேட்பாளர் பெயரை மட்டுமே அறிவித்துள்ளது. ஜனாதிபதி யார் என்பது முடிவாகிவிடவில்லை. அடுத்த ஜனாதிபதி யார் என்பதற்கான வாய்ப்புகள் இன்னும் திறந்தே உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. சிவசேனா எங்கள் கூட்டணியில்தான் உள்ளது. நாட்டின் உயர்ந்த பதவிக்கு தேர்தல் நடக்கும் போது மேலும் ஆலோசனைகள் தேவைப்படுகிறது. எங்கள் கூட்டணி முதல்வர்கள் மற்ற தலைவர்களுடன் அத்வானி பேசுவார்’’ என்றார்.
‘வட போச்சே...’ டென்ஷன்
ஜனாதிபதி வேட்பாளர் தேர்வை, 2014 லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு பாரதிய ஜனதா என்னென்னவோ கூட்டிக்கழித்து கணக்கு போட்டது. கடைசியில் இடியாப்ப சிக்கலில் முடிந்துள்ளது.
} பிரணாப்பை ஆதரித்து, அதற்கு ‘ஆறுதல் பரிசாக’ துணை ஜனாதிபதி பதவியை பெறலாமா?
} அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆதரிக்கும் சங்மாவை ஆதரித்து, இந்த இரு கட்சிகளுடன் 2014ஐ சந்திக்கலாமா?
} மம்தாவை இழுத்து, மீண்டும் தேஜ அணியில் திரிணாமுல் காங்கிரசை சேர்க்கலாமா?
} அதற்காக, மம்தா ஆதரிக்கும் கலாமை ஏற்றால், சங்மாவை கைவிடலாமா?
} அப்படி கைவிட்டால், 2014ல் அதிமுக, பிஜு ஜனதா தளம் தன் அணியில் சேராதே?
} பிரணாப்பை ஏற்றால் என்ன தவறு என்றால், லோக்சபா தேர்தலில் மூன்று கட்சிகளுமே தங்களை ஒதுக்கி விட வாய்ப்புள்ளதோ?
} பிரணாப்பை ஆதரிக்காவிட்டால், அவரை ஆதரிக்கும் சிவசேனா, ஐக்கிய ஜனதாதளத்தை இழக்க வேண்டியிருக்குமோ?
இவ்வளவு கேள்விகள் எழுந்தால் எப்படிதான் ஒரே நாளில் முடிவெடுப்பது? ‘காங்கிரஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டலாம் என்று என்னமோ கணக்கு போட்டோம்; என்னவோ நடக்குதே...துணை ஜனாதிபதி பதவியும் கிடைக்காதோ’ என்று வடிவேலு காமெடி ‘வட போச்சே’ கணக்காய் தேஜ கூட்டணி தலைவர்கள் மனதுக்குள் புலம்புகின்றனர்.
No comments:
Post a Comment