Friday, June, 22, 2012ராமேஸ்வரம்::இலங்கை பேசாளையில் 790 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் (சர்வதேச மதிப்பு ரூ.75 லட்சம்) சிக்கிய, தமிழக கடத்தல்புள்ளி அப்துல் ரகுமான் குறித்து, புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர். இலங்கை தலைமன்னார் அருகே பேசாளை நடுக்குடா பகுதியில் ஜூன் 17ல், பேசாளை சற்குணராஜா உதயகுமார் மற்றும் இவரது நண்பரான ராமநாதபுரம் நூர்தீன் மகன் அப்துல்ரகுமான் ஆகியோர் அந்நாட்டு போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து 790 கிராம் எடையுள்ள ஹெராயின் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. "ராமேஸ்வரத்திலிருந்து படகில் போதைப்பொருளை கடத்தி வந்ததாக' தெரிவித்த அப்துல் ரகுமான், சற்குணராஜ உதயகுமார் ஆகிய இருவரையும் தொடர் விசாரணைக்காக தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இருவரையும் இன்று(ஜூன் 22) மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், ஏற்கனவே வாலிநோக்கம் பகுதியில் பல கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக, பல பெயர்களில் வலம் வந்தது, போலி முகவரியை தெரிவிப்பது இவரது வழக்கம் என தெரிய வந்துள்ளது. இவர் இலங்கைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து யாருடைய படகில் சென்றார், இவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார் என்பது குறித்து இந்திய புலனாய்வு துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment