Friday, June 22, 2012

பா.ஜ.,வின் குற்றச்சாட்டு குழந்தைத்தனமானது: காங்., பதிலடி!

Friday, June, 22, 2012
புதுடில்லி::ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக, பிரணாப் முகர்ஜியை அறிவிக்கும் முன்னர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என, பா.ஜ., புகார் தெரிவித்திருப்பது குழந்தைத்தனமானது' என, காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ஜனார்த்தனன் திவேதி டில்லியில் நேற்று கூறியதாவது:பா.ஜ.,வால் இரவல் வாங்கப்பட்ட வேட்பாளர் பி.ஏ.சங்மா. போட்டி இருக்க வேண்டும் என்பதற்காகவே, லோக் சபா முன்னாள் சபாநாயகர் சங்மாவை ஆதரிக்கப் போவதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அவர்கள் அரசியல் விளையாட்டு விளையாடுகின்றனர். பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவிக்கும் முன்னர், தங்களிடம் ஆலோசிக்கவில்லை என பா.ஜ., தெரிவித்துள்ளது குழந்தைத் தனமானது. பயனற்ற பேச்சு.ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்தவுடன், பிரதமர் மன்மோகன்சிங் அனைத்து அரசியல் கட்சிகளையும் தொடர்பு கொண்டு, "பிரணாப்பிற்கு ஆதரவு தர வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரணாப்பிற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார்.

பா.ஜ., இன்றைக்கு சொல்வது எல்லாம், உண்மைக்கு மாறானது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடிய தகுதி, சங் மாவிற்கு இருந்தாலும், அவரையும், பிரணாப்பையும் ஒப்பிட முடியாது. பிரணாப்பிற்கு ஆதரவு தர வேண்டும் என, பிரதமர் மன்மோகன்சிங் கேட்டபோது, பா.ஜ., தலைவர்கள், பிரணாப்பை நிறுத்த வேண்டாம் என, ஏன் சொல்லவில்லை. கலாம் பெயரை அவர்கள் பரிசீலித்தது ஏன்.கடந்த 2002ம் ஆண்டில், ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாமின் பெயரை, பா.ஜ., முன்மொழிந்தபோது, காங்கிரஸ் கட்சி, வேட்பாளரைத் தேடி அலையவில்லை. கலாமை ஆதரித்தது. அதை யாரும் மறுக்க முடியாது.இவ்வாறு திவேதி கூறினார்.

No comments:

Post a Comment