Tuesday, June 12, 2012

இலங்கைக்கு விதி விலக்கு!

Tuesday, June, 12, 2012
ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதார தடையில் இருந்து, இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் இதனை அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், இலங்கை, இந்தியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி மற்றும் தாய்வான் போன்ற நாடுகளுக்கு இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த ஏழு நாடுகளும் ஈரானில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான தடையை தொடர்ந்து, இந்த நாடுகள் சடுதியாக தமது எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்டன.

இதனைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஹிலரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கடந்த மார்ச் மாதம் இந்த தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குகிறது.

இதேவேளை இந்த விதிவிலக்கு தொடர்பில் எரிபொருள் துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்தவிடம் எமது செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு வினவியது.

இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர், ஈரானில் இருந்து இறக்குமதி செய்யாதுவிடப்பட்ட ஒரு தொகுதி எண்ணெயையும், இந்த தடை நீக்கத்தின் மூலம் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment