Tuesday, June, 12, 2012ராமேஸ்வரம்::இலங்கை சிறையில் இருக்கும் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு, ஜாமின் வழங்க மறுத்து, யாழ்ப்பாணம் கோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து, 2011, டிச., 29ல், படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் எமர்சன், வில்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ் ஆகியோர், போதைப் பொருட்கள் கடத்திச் சென்றதாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை, இலங்கை போலீசார், யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மீனவர்கள் மீது, இலங்கை போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், ஐந்து பேரையும் மீட்டுத் தரவும், உறவினர்கள், தமிழக அரசிடம் முறையிட்டனர். இவர்கள் மீதான வழக்கை நடத்துவதற்கு, தமிழக முதல்வர், 2 லட்ச ரூபாய் நிதி வழங்கியதை தொடர்ந்து, நிரபராதி மீனவர்களை மீட்கும் அமைப்பினர், இதற்கான நடவடிக்கை எடுத்தனர்.
இலங்கை மல்லாகம் கோர்ட்டில், வழக்கு நடந்து வந்த நிலையில், சிறையில் உள்ள ஐந்து மீனவர்களையும் ஜாமினில் எடுப்பதற்கு, நிரபராதி மீனவர்களை மீட்கும் அமைப்பினரால், இலங்கையில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார்.
மல்லாகம் கோர்ட்டில், ஐந்து மீனவர்களுக்கும் ஜாமின் மறுக்கப்பட்டது. நேற்று காலை, யாழ்ப்பாணம் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை, விசாரணை செய்த நீதிபதி விஸ்வநாதன், ஜாமின் வழங்க மறுத்து உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment