Sunday, June 17, 2012

மேடைகளில் மக்கள் முன் வீர முழக்கம்; ஊடகங்களில் வேறொரு விளக்கம்: தமிழரசு கட்சியின் தடுமாற்ற அரசியல் இனியும் தொடருமா?

Sunday, June, 17, 2012
இலங்கை::தமிழரசுக் கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது தவறு நேர்ந்திருப் பதாக அக்கட்சியினர் கூறுவது அவர்களின் தடுமாற்ற அரசியலைப் புலப்படுத்துவதாகப் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநாட் டின்போது கட்சியின் தலைவர் இரா. சம்பந் தன் ஆற்றிய உரையே சர்ச்சையைத் தோற்று வித்திருக்கிறது. அந்தச் செய்தியை முதன் முதலில் ‘இந்து’ பத்திரிகையே வெளியிட்டிருந்தது. அப்போது அதுபற்றி தமிழரசுக் கட்சியினர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இப்போது, சம்பந்தனின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென தேசப் பற்றுள்ள சில அரசியல் கட்சிகள் கோரியுள்ளன. நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையிலேயே, தமிழரசுக் கட்சியின் யாப்பு தவறுதலாக மொழி பெயர்க் கப்பட்டுள்ளதென்று சம்பந்தன் எம்பி யும் சுமந்திரன் எம்.பியும் கூறுகின்றனர். இதன் மூலம் இவர்களின் தெளிவற்ற அரசியல் செல்நெறி புலனாகுவதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

‘இந்து’ பத்திரிகை இந்தியாவில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது. இலட்சோப இலட்ச வாசகர்களைத் தன்னகத்தே கொண்ட பத்திரிகை. அந்தப் பத்திரிகை தவறான மொழி பெயர்ப்பை வழங்கிவிட்டது என்றால் எவராவது நம்புவார்களா? அப்படியாயின் அதனை ஏன் உடனடியாகச் சுட்டிக் காட்ட வில்லை. தவிரவும், தமிழரசுக் கட்சியினர் ஆங்கில மொழிப் புல மையில் எந்த விதத்திலும் குறைந் தவர்கள் இல்லையென்ற கருத்தியலும் நிலவுகிறது. அவர்கள் தம் கட்சியின் யாப்பை சரியாக மொழிபெயர்த்து வழங்கியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆக சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியினர் மக்களைக் கவர்வதற்கு மேடையில் ஒரு கருத்தையும் ஊடகங்களுக்கு வேறொரு கருத்தையும் தெரிவிக்கிறார்கள் என்று புத்திஜீவிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

உண்மையான அரசியல்வாதிகள், மக்கள் தலைவர்கள் எனின் கருத்துகளைத் தீர்க்க தரிசனத்துடன் முன்வைப்பார்கள். அப்படியே தப்பித் தவறி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டாலும் அதனைத் தெளிவுபடுத்துவார்கள் அல்லது தமது கருத்தில் உறுதியாக இருப்பார்கள். தமிழரசுக் கட்சியினரைப் போன்று நெகிழமாட்டார்கள் என்றும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, மொழிபெயர்ப்பு தவறு என்பதைவிட தமிழரசு கட்சியின் உண்மையான நிலைப்பாட்டை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கட்சியின் யாப்பில் நாட்டைப் பிரிக்கும் வகையிலான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் உள்ள தமது கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது அதில் தவறுகள் இடம்பெற்றுள்ளதென இரா. சம்பந்தன் ‘தி ஹிந்து’ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, தமிழர் விடுதலை கூட்டணி, ஈ.பிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் யாப்பில் நாட்டை பிரிப்பது தொடர்பில் ஏற்பாடுகள் உள்ளதால் அந்த கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரி சிங்கள தேசிய முன்னணியின் செயலாளர் ஜயந்த லியனகே உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

எனினும் மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டில் உரையாற்றிய சம்பந்தன், தமிழர் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க புதிய தருணம் பிறந்துள்ளதென கூறியதாக ‘தி ஹிந்து’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் தமிழர்கள் உரிமைகளை பெற்றுக்கொடுக்க ஒருபோதும் செயற்படுவதில்லை எனவும் அதனால் ஐக்கிய இலங்கைக்குள் ஒருபோதும் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளை பெற முடியாது எனவும் சம்பந்தன் மட்டக்களப்பில் கூறியதாக ‘தி ஹிந்து’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment