Sunday, June, 17, 2012இலங்கை::தமிழ்மக்கள் இன்று அரசியல் அநாதைகளாக உள்ளனர் என்று கூறினால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில் அம்மக்களை சரியான முறையில் தலைமை வகித்து வழிநடத்த பொறுப்பான தமிழ் அரசியல்வாதிகள் அவர்கள் மத்தியில் இன்று இல்லை எனக் கூறலாம். அதனால் அரசாங்கமே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவும் இருந்து செயற்படுகின்றது என்று கூறினாலும் அது பொய்யாகாது.
ஒரு காலத்தில் வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரையில் அங்கு வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே எனப்புலிகள் தமக்குத் தாமே மகுடம் சூடி வந்தனர். அந்த மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ அதனை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதுதான் அன்றைய கால கட்ட நிலையாக இருந்தது. அதனால்தான் அப்போது பதவி வகித்த அரசாங்கங்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டன.
ஆனால் இன்று புலிகள் இல்லை. புலிகளுடன் உறவு வைத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகள் அரசாங்கங்களுடன் அன்று நடத்தி வந்த பேச்சுவார்த்தையை இப்போது தொடர்ந்து வருகிறது. இறுதி யுத்தம் நடந்து முடிந்து இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் கூட்டமைப்பு இரண்டு சுற்றுப் பேச்சுக்களை அரசாங்கத் தரப்புடன் நடத்தி விட்டது.
இந்தப் பேச்சுக்கள் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான திட்டங்களையும் கால அட்டவணையையும் தயார்படுத்தும் சந்திப்புக்களாகவே உள்ளன. மொத்தத்தில் பேச்சுக்கள் இன்னமும் பல தலைமுறைக்குத் தொடரவுள்ளதைத் தெளிவாக உணர முடிகிறது. இவ்விடயத்தில் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டி தப்பித்துக் கொள்ள யாரும் முனையக் கூடாது. ஏற்கனவே யுத்தம் யுத்தம் என்று முப்பது வருடங்கள் பாழாகிவிட்டன.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அரசாங்கம் இருக்குமாயின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீரிவினை அரசாங்கத்தினால் இலகுவாக முன்வைக்க முடியும். ஆனால் தமிழ்மக்களின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு அம்மக்களின் கணிசமான வாக்குகளால் வெற்றிகள் சிலவற்றைப் பெற்றுள்ள தமிழ்க் கூட்டமைப்பு இன்று அத்தமிழ் மக்களுக்காகப் பேசுவதாக களத்தில் இறங்கியுள்ளது. அதற்கு அரசாங்கம் இடமளித்துள்ளது.
ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்தே அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறது. இதனை அரசாங்கத்தின் பலவீனமாகக் கருதி தாமே தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் அதனையே அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அமுல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்க் கூட்டமைப்பு நினைத்தால் அது அறியாமையாகவே கருதப்படும்.
அரசாங்கம் இந்நாட்டிலுள்ள அனைத்து இன, மத, மொழி மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டிற்குள் உள்ளது. அத்துடன் எதிர்க்கட்சிகளின் பொய்யான சோடிக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் கவனத்திற்கொண்டும் நாட்டு நிலனைக் கருதியும் செயற்பட வேண்டியுள்ளது. அவ்வாறிருந்தும் அரசாங்கம் தமிழ்க் கூட்டமைப்பிற்கு மதிப்பளித்து அவர்கள் மூலமாக தமிழ் மக்களுக்குரிய கெளரவத்தை வழங்கி பிரச்சினைக்குத் தீர்வு காண சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.
அரசாங்கம் நினைத்திருந்தால் தமிழ்க் கட்சிகள் எதனையும் கருத்திற்கொள்ளாது தமிழ் மக்களது பிரச்சினைக்கு இதுதான் தீர்வு, இதனைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதனையாவது கூறித் திணித்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யப்படவில்லை. நிச்சயமாக இன்றைய அரசாங்கம் அதனைச் செய்யமாட்டாது என்பது அதன் நற்செயற்பாடுகளிலிருந்து தெரிய வருகிறது.
எனவே, தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்தின் இந்த விட்டுக் கொடுப்பைக் கருத்திற் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிராது உடனடியாகவே தீர்வு குறித்துக் கலந்துரையாட முன்வர வேண்டும். அரசியல் அநாதையாகவுள்ள தமிழ் மக்கள் ஒரு நல்ல தீர்வினைப் பெற்றுக்கொள்ள கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஆராக்கியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு அதே அரசாங்கத்தை வெளியே வந்து ஊடகங்களில் விமர்சிப்பதால் நினைத்ததை அடைய முடியாது. தமிழ் ஊடகங்களில் அரசாங்கத்தை வசைபாடி தமிழ் மக்களின் ஆதரவைப் பெற நினைக்கும் கூட்டமைப்பு சாதிக்க நினைப்பது என்ன? தமிழ் மக்கள் தொடர்ந்தும் அரசியல் அநாதைகளாக இருப்பதை கூட்டமைப்பு விரும்புகின்றதா? அப்படி ஒரு சூழ்நிலை இருந்தால்தான் தமது அரசியல் வாழ்வு தொடரும் எனக் கூட்டமைப்பிலுள்ள சிலர் கருதுகின்றார்களா? அரசாங்கம் உங்களை நம்பி பேச முனைவதால் அதைத் தமிழ் மக்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி முப்பது வருடங்களாக அரசியல் அநாதைகளாக உள்ள அம்மக்களுக்கு நல்லதோர் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க உதவி புரிய வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் அரசாங்கத்தை நேரடியாகவே தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து தீர்வினைப் பெற்றுக்கொள்ள வழிவிட்டு விலகிக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment