Friday, June 29, 2012

இலங்கை தமிழர் மறுவாழ்வு ராஜபக்சேவுடன் சிவசங்கர் மேனன் பேச்சு!

Friday, June, 29, 2012
சென்னை::இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து, அதிபர் ராஜபக்சேவுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இலங்கையில் சண்டை முடிவுக்கு வந்த பின், தமிழர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தவும், மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தவும் இந் தியா நிதியுதவி வழங்கியது. எனினும், இன்னும் ஏராளமானோர் முகாம்களில் உள்ளனர். அத்துடன் இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அங்கிருந்து வாபஸ் பெற்று, தமிழர் மறுவாழ்வுக்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், நேற்றிரவு இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் அழைத்து சென்றனர். இலங்கை அதிபர் ராஜபக்சே, அவரது தம்பியும் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பசில் ராஜபக்சே, மற்றொரு தம்பி ராணுவ செயலர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரை சந்தித்து சிவசங்கர் மேனன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்கள், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை வாபஸ் பெறுவது, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து சிவசங்கர் மேனன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிராக இலங்கை அமைச்சர்கள் பேசுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராஜபக்சேவிடம் மேனன் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. தமிழ் அரசியல் கட்சி தலைவர் ராஜவயோதி சம்பந்தனை சந்திக்கவும் மேனன் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், மேனனின் இலங்கை பயணம் குறி த்து அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் பிரேசிலில் ரியோ&20 மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங்கும் & ராஜபக்சேவும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment