Saturday, June 30, 2012

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம்!

Saturday, June 30, 2012
இலங்கை::சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை தமது விருப்பின் பேரில் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ் குமார் தெரிவித்தார்.

மேற்படி தமிழ் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட விசேட ஆணையார்களுள் ஒருவரான காமினி குளதுங்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து இந்த தீர்மானத்தை அறிவித்திருந்தார்.

தமிழ் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்தவென விசேட நீதிமன்றங்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், கைதிகளின் விருப்பின் பேரில் இவர்களை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் ஆயுதப் பயிற்சி எடுக்காத, புலி உறுப்பினர்களல்லாதவர்களுக்கும் புனர்வாழ்வளிக்கப்படுமென்பதனையும் அவ் ஆணையார் சுட்டிக்காட்டினார்.

மேலும் எவ்வித அரசியல் நோக்கமுமின்றி அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்பதற்காகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், கடந்த கால வரலாறை மறந்து அனைவரும் ஒற்றுமையாக ஒத்துழைக்க வேண்டுமெனவும் சிறைக் கைதிகளைக் கேட்டுக் கொண்டார்.

ஆணையாளர் தெரிவித்த தீர்மானத்திற்கு சம்மதம் தெரிவித்த மகசின் சிறைக் கைதிகள் தம்மை புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதற்கு இணக்கம் தெரிவித்து கடிதம் எழுதி ஆணையாளரிடம் ஒப்ப டைத்துள்ளனர். அநுராதபுரம், நீர்கொழும்பு, மகசின் சிறைச்சாலைகளிலுள்ள 700 தமிழ் கைதிகள் இத்தீர்மானத்தை உடனடி யாக அமுல்படுத்தக் கோரி கடிதம் சமர்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment