Monday, June, 18, 2012இலங்கை::பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை அதன் பின்னர் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த அனுமதிக்க முடியாது என்று இலங்கை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணபிள்ளை அமலதாஸ் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் போதே இந்த கருத்தை நீதிமன்றம் கூறியுள்ளது.
மனுதாரர் 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட போதிலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதனையும் அரசாங்க தரப்பு இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரரின் சட்டத்தரணி குற்றஞ்சாட்டினார்.
ஆனால், யுத்தம் நடைபெற்றபோது அரசபடைகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியதாக 3 குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் சுமத்துவதாக அரச சட்டவாதி நீதிமன்றத்தில் கூறினார்.
இதில் ஒரு குற்றச்சாட்டில் இருந்து சந்தேகநபரை விடுதலை செய்வதற்கும், அடுத்த குற்றச்சாட்டுக்காக அவரை 6 மாதங்கள் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பவும் சட்ட மா அதிபர் முடிவு செய்துள்ளதாகவும், அவர் கூறினார்.
அதேவேளை மூன்றாவது குற்றச்சாட்டு குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
ஆனால், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட ஒருவர் மீது மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறினார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க.
இவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி கே. சிறிபவன், சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அரச சட்டவாதிக்கு உத்தரவிட்டார்.
வழக்கு மீண்டும் அடுத்த மாதம் 20 திகதி விசாரணைக்கு வரும் போது, மனுதாரர் குறித்த இறுதி முடிவை அறிவிக்குமாறும் சட்ட மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment