Tuesday, June, 12, 2012இலங்கை::இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக பெயரிடப்பட்டுள்ள மிச்செல் சிசென், அமெரிக்க செனட் முன்னிலையில் தெரிவித்துள்ள கருத்து அமெரிக்காவின் கொள்கைகளுக்கு இசைவானதாக அமைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆறாம் திகதி வெளிவிவகாரங்கள் தொடர்பான செனட் சபை முன்னிலையில் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராக பெயரிடப்பட்டுள்ள மிச்செல் ஜே சிசென் பதிவு செய்த கருத்து குறித்து விளக்கமளிக்கும் வகையில் அமெரிக்கத் தூதரகத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நீண்டகால கொள்கைகளை அவரது கருத்து மீள வலியுறுத்துவதாக அமைந்துள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
குறிப்பாக இலங்கையின் வடபகுதியில் இராணுவக் குறைப்பு இடம்பெற வேண்டும் எனவும், வடபகுதிக்கான மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், தீர்க்கப்படாத மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான முறையான கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் புதிய தூதுவராக பெயரிடப்பட்டுள்ள மிச்செல் சிசென் செனட் சபை முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கள் அமெரிக்க கொள்கைகளுடன் இணங்கிச் செல்வதாகவும், முன்னைய அமெரிக்க அதிகாரிகளின் கருத்துக்களுடன் ஒத்துப்போவதாகவும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் வொஷிங்டனில் சந்தித்த போது, இந்த விடயங்களை தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையில் பரந்தளவிலான ஒத்துழைப்பு அவசியமாகும் என புதிதாக பெயரிடப்பட்டுள்ள அமெரிக்கத் தூதுவர் செனட் சபை முன்னிலையில் ஆற்றிய உரையில் வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment