Monday, June 11, 2012

கூடங்குளம் அணுத் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை!

Monday, June, 11, 2012
இலங்கை::தமிழகத்தின் கூடங்குளம் அணுத் திட்டம் தொடர்பாக இலங்கை இந்திய அதிகாரிகள் புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் தயாராகி வருவதாக இலங்கை அணுசக்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்தார்.

கூடங்குளம் அணுத்திட்டம் தொடர்பாக தமிழகத்தின் ஒருசிலர் எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் நிலையில், அரசியல் நோக்கங்களுக்காக இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் கூடங்குளம் அணுத்திட்டத்தின் தொழில்நுட்பம் மற்றும் அதனால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில் ஆபத்துக்களை தவிர்ப்பது தொடர்பாக புதுடில்லி பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்படும் என அணுசக்தி அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் அணுத் தொழில்நுட்பம் மிகவும் உயர்ந்த தரத்துடன் இருப்பதாகவே இலங்கை அணுசக்தி அதிகாரசபை கருவதுவதாக அவர் கூறினார்.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட 19 அணுத்திட்டங்கள் தற்போது வெற்றிகரமாக செயற்படுவதாகவும் கலாநிதி ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்தார்.

உலகலாவிய ரீதியில் தற்போது சுமார் 450 அணு உலைகள் காணப்படுவதாகவும் அவற்றின் ஊடாக ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அரிதாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புகுஷிமா அணு உலை மற்றும் வேறு அணு உலைகளால் கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துக்களின் அனுபவங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில், அத்தகைய சம்பவங்கள் இடம்பெறாதிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையிலும் தொடர்ந்தும் அத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கலாநிதி ரஞ்சித் விஜயவர்தன கூறினார்.

எவ்வாறாயினும் விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து கூடங்குளம் அணுத் திட்டத்தினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து உறுதிப்படுத்திக்கொள்வதே அணு சக்தி அதிகார சபையின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment