Wednesday, 20th of June 2012சென்னை::வசூல் வேட்டையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா விடுத்த எச்சரிக்கையால் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர். சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை அள்ளுதல் போன்ற மக்கள் பிரச்னைகளில் அக்கறை காட்டுவதில்லை என்றும் முதல்வருக்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்றன. இதையடுத்து, சென்னையில் நேற்று அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை முதல்வர் திடீரென கூட்டியிருந்தார். மேயர், துணை மேயர் மற்றும் 169 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி ஆகியோர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் யாரும் கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் வந்ததும் கூட்ட அரங்கத்தின் கதவுகள் மூடப்பட்டன. பின்னர், முதல்வர் பேசியதாவது: அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோரிடம் இவ்வளவு தொகை வேண்டும் என்று கேட்கிறீர்கள், அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் கடைகளிலும் வசூல் நடக்கிறது. சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு, நடைபாதை கடை, பங்க் கடை என்று எதற்கெடுத்தாலும் வசூல் நடப்பதாக புகார் வந்து கொண்டிருக்கிறது. பொறுப்புக்கு வந்த 7 மாதத்திலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கவுன்சிலரை பற்றியும் ஆதாரத்துடன் வந்துள்ள புகார்கள் என்னிடம் உள்ளது.
அரசு இடத்தையே பிளாட் போட்டு விற்பது, கார்ப்பரேஷன் இடத்தில் கார் பார்க்கிங் செய்ய தன்னிச்சையாக கட்டண வசூல் என்று தனி ராஜ்ஜியமே நடத்துகிறீர்கள். இதையெல்லாம் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. பெண் கவுன்சிலர்கள் பற்றி சொல்லவே வேதனையாக இருக்கிறது. அவர்கள் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. உங்கள் எல்லாருக்கும் இன்னும் ஒரு மாதம் டைம் தருகிறேன். அதற்குள் திருந்தி விடுங்கள். யாரை பற்றியும் புகார் வரக்கூடாது. வந்தால் மாநகராட்சியையே கலைத்து விடுவேன். மீண்டும் தேர்தல் நடத்தும்போது உங்கள் ஒருவருக்கும் சீட் கிடைக்காது. இவ்வாறு ஜெயலலிதா எச்சரித்ததாக கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தெரிவித்தனர். மேயர், துணைமேயர் தவிர அனைத்து கவுன்சிலர்கள் மீதும் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். ஒவ்வொருவர் பெயரை சொல்லியும் அவர்கள் மீதான புகார்களை கூறியுள்ளார். சுமார் 45 கவுன்சிலர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்கள் மீது பெரிய அளவில் புகார்கள் வந்துள்ளன. அதனால், அவர்கள் எந்த நேரத்தில் பதவி பறிக்கப்படுமோ என்ற அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். ஜெயலலிதா வாசித்த பட்டியலில் இடம் பெற்றிருந்த 45,க்கும் அதிகமான கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர்..
ஜெயலலிதா நாளை கோடநாடு பயணம்!
சென்னை::முதல்வர் ஜெயலலிதா நாளை கோடநாடு செல்கிறார். சில வாரங்கள் அங்கிருந்தபடியே அரசு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி 2011ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. கடந்த மே மாதம் பட்ஜெட் கூட்டம் முடிந்தவுடன் கோடநாடு செல்வார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் ஜெயலலிதா கோடநாடு செல்லவில்லை. சென்னையை அடுத்த சிறுதாவூர் பங்களாவில் தங்கி இருந்து தினமும் சென்னை கோட்டைக்கு வந்து அரசு பணிகளை கவனித்தார். இந்நிலையில் புதுக்கோட்டை தேர்தல் முடிந்து, புதிய எம்எல்ஏ நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா கோடநாடு சென்று சில வாரங்கள் தங்கி இருக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து நாளை நீலகிரி மாவட்டம் கோடநாடு புறப்பட்டுச் செல்கிறார். சில வாரங்கள் அங்கு தங்கி இருப்பார். அங்கிருந்தபடியே அரசு பணிகளை மேற்கொள்வார்’ என்று கூறப்பட்டுள்ளது. தமிழக தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி இல்ல திருமணம் சென்னையில் நாளை காலை நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். பின்னர் பிற்பகல் தனி விமானம் மூலம் கோவை செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் அல்லது சாலை பயணமாக கோடநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் அரசு துறையின் சில செயலாளர்களும் செல்கிறார்கள். கோடநாட்டில் தங்கி அரசு பணிகளை மேற்கொள்ள உள்ள ஜெயலலிதாவை அவ்வப்போது அமைச்சர்களும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment