Friday, June 22, 2012

மும்பை தலைமை செயலக தீயில் 3 பேர் உடல் கருகி பரிதாப பலி!

Friday, June, 22, 2012
மும்பை::மும்பை தலைமை செயலகத்தில் பிடித்த தீ, 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அணைக்கப்பட்டது. தீயில் கருகி பலியான 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. மகாராஷ்டிர மாநில தலைமை செயலகமான மந்த்ராலயா, தெற்கு மும்பை நரிமன் பாயின்டில் உள்ளது. 6 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் முதல்வர், மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் தலைமை செயலகத்தின் 4வது மாடியில் உள்ள பழங்குடியினர் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென மேல் தளங்களுக்கு பரவியது. தீப்பற்றிய போது, கட்டிடத்தில் 5000க்கும் அதிகமானோர் பணியில் இருந்தனர். அவர்கள் பீதி அடைந்து ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு வெளியேறினர். ஜன்னல் வழியாக கீழே குதித்தும், குழாய்களை பிடித்து கீழிறங்கியும் பலர் உயிர் தப்பினர். தகவல் அறிந்ததும் 25க்கும் அதிகமான வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயில் சிக்கிய பலரை கிரேன்கள் உதவியுடன் மீட்டனர். மாடியில் தவித்தவர்களை கடற்படை ஹெலிகாப்டர்கள் மீட்டன.

விடிய விடிய தீயணைக்கும் பணி நடந்தது. 12 மணி நேரம் கழித்து இன்று அதிகாலை தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. தீயில் கருகி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். அவர்களில் இருவர் உடல்கள், துணை முதல்வர் அஜீத் பவாரின் அறைக்கு முன்பு மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். தீ விபத்தில் முதல்வர் பிருதிவிராஜ் சவான், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் எரிந்து நாசமாயின. முக்கிய கோப்புகளும் எரிந்து நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது. பழங்குடியின நல்வாழ்வுத் துறை அமைச்சர் அலுவலக ஏசியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. விபத்து குறித்து கிரைம் பிராச் போலீஸ் விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டார். ‘ஆதர்ஷ் ஊழல் மற்றும் பல்வேறு ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் தலைமை செயலகத்தில்தான் உள்ளன. அவற்றை அழிக்கவே தீவைத்து நாசவேலை நடந்திருக்கலாம். எனவே, வெளிநாட்டு நிபுணர்களை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்Õ என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

No comments:

Post a Comment