Friday, June, 22, 2012இலங்கை::தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, சுபிட்சமான எதிர்காலத்திற்காக போராடி 19.06.1990 இல் பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பத்மநாபா அவர்களையும் மக்களின் விடிவுக்காக தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், இதர அமைப்புக்களை சேர்ந்தவர்கள், பொதுமக்களையும் நினைவு கூர்ந்து வருடம் தோறும் ஜுன் 19ம் திகதி அனுஸ்டிக்கப்படும் தியாகிகள் தின வைபவம் (19.06.2012) பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான அஞ்சலி நிகழ்வுகள் பிற்பகல் 2.00 மணிவரை இடம்பெற்றது. இதனை தொடர்ந்து உயிர் நீத்த தோழர்களின் நினைவாக இரத்த தானமும் வழங்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட சுந்தரம் ஐயா அவர்களின் துணைவியார் குத்துவிளக்கேற்றியதுடன் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சுகு சிறிதரன் போராட்டத்தில் உயிர் நீத்த தோழர்கள் மற்றும் இதர கட்களின் தலைவர்களது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார். போராட்டத்தில் பங்கேற்று தனது இரண்டு புதல்வர்களை இழந்த விமலாதேவி அவர்கள் அமரர் தோழர் பத்மநாபா, அமரர் தோழர் றொபேட் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்தார். அனைவரும் எழுந்துநின்று தமிழ் மக்களின் சுபிட்சமான எதிர்காலத்திற்காக உண்மையாக உழைத்து தம் உயிரை அர்ப்பணித்த அனைவருக்காகவும் அஞ்சலி செலுத்தினர்.
தியாகிகள் தின சிறப்பு நிகழ்வாக தியாகிகள் தின நினைவு சொற்பொழிவுகள் இடம்பெற்றது. 'யுத்தத்தின் பின்னர் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகள்' என்ற தலைப்பில் சமூக சேவையாளரும், போராட்டத்தில் ஆரம்பகாலம் தொட்டே ஈடுபாடு கொண்டவருமான பிரபல ஆசிரியர் திரு. இரா.செல்வவடிவேல் அவர்களும் 'கடந்த 30 வருட கால போராட்டம் தொழிலாளர்கள், விவசாயிகள், வறிய கூலி உழைப்பாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?' என்னும் தலைப்பில் விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்தவரும், தொழிலாளர் விவசாயிகள் மத்தியில் வேலை அனுபவம் உள்ளவரும், இப்போதம் தொழிலாளர் விவசாயிகள் மத்தியில் செயற்பட்டு வருபவருமான தோழர் ஜெகநாதன் அவர்களும் நினைவு சொற்பொழிவாற்றினர்.
No comments:
Post a Comment