Sunday, June 10, 2012

இந்திய கடற்படைக்கு38 அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பல்கள் வாங்கப்படும்:கடற்படை துணைத் தளபதி தகவல்!

Sunday, June, 10, 2012
அரக்கோணம்::இந்திய கடற்படைக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 38 அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பல்கள் வாங்கப்படும் என்று கிழக்கு பிராந்திய கடற்படை துணைத் தளபதி சுனில் லாம்பா தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி

வேலூர் மாவட்டம், அரக்கோணம் கடற்படை விமான தளமான ஐ.என்.எஸ். ராஜாளியில் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி உள்ளது. இதில் ஹெலிகாப்டர் பயிற்சி பெற்ற 78-வது குழுவை சேர்ந்த 9 பேருக்கு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கி வழி அனுப்பும் விழா நடந்தது.

இந்த விழாவுக்கு கிழக்கு பிராந்திய கடற்படை துணைத் தளபதி சுனில் லாம்பா தலைமை தாங்கி பைலட்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

போயிங் விமானம்

அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளிக்கு இன்னும் ஒரு ஆண்டுக்குள் `பி8 ஐ' நவீன ரக போயிங் விமானம் வாங்கப்படும். இதற்காக ராஜாளி விரிவாக்கப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரஷியாவின் நவீனமயமாக்கப்பட்ட விக்கிரமாதித்யா என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியா வாங்க உள்ளது. கடற்படையை பலப்படுத்த இன்னும் 10 ஆண்டுகளுக்குள் 38 அதி நவீன விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் வாங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை சுனில்லாம்பா ஏற்றுக்கொண்டிருந்தபோது வானில் 3 ஹெலிகாப்டர்கள் ஒரே சீரான வேகத்தில் வட்டமிட்டு சென்றது பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருந்தது.

பயிற்சியை நிறைவு செய்தவர்களில் 4 கடற்படை வீரர்களும், 5 கடலோர காவல்படை வீரர்களும் ஆவார்கள். மொத்தம் 9 பேரில் துணை கமாண்டன்ட் பிரதீப்கவுர், துணை கமாண்டன்ட் ரூபல்லம்பா ஆகிய 2 பேர் பெண்கள்.

No comments:

Post a Comment