Saturday, June 23, 2012

ஏவுகணைகளை வாங்க ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது!

Saturday, June 23, 2012
புதுதில்லி::ஏவுகணைகளை வாங்க ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ராணுவத்துக்குத் தேவையான ஏவுகணைகள், ஆயுதங்கள், நவீனக் கருவிகளைப் பெறுவதில் அரசு போதிய அக்கறை காட்டவில்லை எனப் புகார் கூறப்பட்டு வரும் நிலையில் அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சில் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், ராணுவத்தின் 8 படைப் பிரிவுகளுக்காக தரையிலிருந்து வான் இலக்குகளை விரைவாகத் தாக்கும் ஏவுகணைகளை வாங்க ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. விமானப் படைக்கு சிறிய ரக போர் விமானங்களை வாங்குவதற்கும், நாடு முழுவதும் ராணுவத் தகவல் தொடர்பை மேம்படுத்தவும், கடற்படைக்கு நவீன துப்பாக்கிகள் வாங்குவதற்கும் ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமானப் படையின் தகவல் தொடர்புத் திட்டம் ரூ.7 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும்.

ஏவுகணை: இப்போது பயன்பாட்டில் உள்ள ரஷிய தயாரிப்பான "குவாட்ராட்' ஏவுகணைகளுக்குப் பதிலாக புதிய ஏவுகணைகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்படும். அமெரிக்காவின் "ரேய்தியான்', இஸ்ரேலின் "ரஃபேல்', பிரான்ஸின் "எம்.பி.டி.ஏ' ஆகிய நிறுவனங்கள் நவீன ரக ஏவுகணைகளைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதே போன்ற ஏவுகணைகளை இந்தியாவிலேயே தயாரிக்க பிரான்ஸ் அரசுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக கடந்த மாதம் ஓய்வுபெற்ற ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ராணுவத்தில் ஆயுதங்கள் போதுமான அளவில் கொள்முதல் செய்யப்படவில்லை என புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், பாதுகாப்புத் துறைக்கு அரசு நிதி ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment