Tuesday, June, 12, 2012பெங்களூர்::கர்நாடக போலீசார் அதிரடி சோதனை நடத்துவதால், நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் 1000 பேர் விலை உயர்ந்த பொருட்கள், ஆவணங்களுடன் வெளியேற முயற்சி செய்கின்றனர். அவர்களை வெளியேற விடாமல் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சமீபத்தில் நடந்த சம்பவத்தில் கன்னட அமைப்பினர் தாக்கப்பட்டனர். நித்யானந்தா சீடர்களுக்கும் இவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஆசிரமத்தை அரசு ஏற்க வேண்டும். நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை அளிக்க மாவட்ட கலெக்டருக்கு கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கலெக்டர் வி.ஸ்ரீராம ரெட்டி தீவிர விசாரணை நடத்தி நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் கூறப்பட்ட விவரங்கள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நித்யானந்தாவை உடனடியாக கைது செய்யவும், ஆசிரமத்தில் சோதனை நடத்தி சீல் வைக்கவும் முதல்வர் உத்தரவிட்டார். இதனால் நித்யானந்தா தரப்பு அதிர்ச்சியில் உறைந்தது. ஆசிரமத்தில் தங்கி இருந்த சுமார் ஆயிரம் ஆண், பெண் சீடர்கள் மூட்டை முடிச்சுகளுடன் இன்று காலை முதல் வெளியேற தொடங்கினர். அனைவரும் மதுரை ஆதீனத்துக்கு செல்வதாக கூறப்படுகிறது. சீடர்கள் வெளியேறும் தகவலை அறிந்து கன்னட அமைப்பினர் போலீஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரமத்தை விட்டு வெளியேறும் சீடர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட வேண்டும் என்று வற்புறுத்தினர். இதையடுத்து ஆசிரமத்தை சுற்றி 144 தடை உத்தரவு போடப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆசிரமத்தில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள், ஆவணங்களுடன் பலர் தப்பிச் சென்றுவிட்டனர். மற்ற யாரும் அங்கிருந்து வெளியேறாதபடி போலீசார் கண்காணித்து வருகின்றனர். காலை 11 மணி அளவில் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆசிரமத்துக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது விலை உயர்ந்த பொருட்களும் முக்கிய ஆவணங்களும் சிக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். நித்யானந்தா மதுரை ஆதீனத்தில் தங்க இருப்பதாக கூறப்படுகிறது. விலை உயர்ந்த 4 கார்கள் மதுரை ஆதீன வளாகத்தில் நிற்கின்றன. எனவே அங்குதான் அவர் இருப்பார் என்று பெங்களூர் போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் பெங்களூரிலும் தமிழ்நாட்டிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment