Tuesday, June, 12, 2012புதுக்கோட்டை::புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஏராளமான பெண்கள், முதியவர்கள் காலையிலேயே ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தேர்தலையொட்டி 224 வாக்குச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், ஐஜேகே சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 20 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக, பாஜ ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை. வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. புதுக்கோட்டை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 1,94,980. இவர்களில் ஆண்கள் 97,371. பெண்கள் 97,604. அரவாணிகள் 5 பேர். இவர்கள் வாக்களிக்க புதுக்கோட்டை, கறம்பக்குடி ஒன்றியம், ஊராட்சிகள், புதுகை நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 224 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குகளை பதிவு செய்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் அந்த வாக்குகளை அழித்துவிட்டு பொதுமக்கள் வாக்களிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டன. தேர்தல் பொது பார்வையாளர் பிரேம்சிங் மெக்ரா, எஸ்பி சுதாகர் ஆகியோர் வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்தனர். காலை 8 மணிக்கே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது. ஏராளமான பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் காலையிலேயே பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆர்வமுடன் வாக்களித்தனர். அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டமான் அரசு கலை கல்லூரி வாக்குச் சாவடியில் 8 மணிக்கு முன்னதாகவே வந்து பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டார். தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன், நிஜாம் காலனியில் உள்ள பிரகதாம்பாள் அரசு பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். ஐஜேகே வேட்பாளர் சீனிவாசனுக்கு ஓட்டு இல்லை. இதேபோல் தேர்தல் அதிகாரிகள் கலெக்டர் கலையரசி, ஆர்டிஓ முத்துமாரி ஆகியோருக்கும் ஓட்டு இல்லை.
அனைத்து சாவடிகளிலும் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வெப் கேமராக்கள் மூலம் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். வாக்கு பதிவை முன்னிட்டு தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 கம்பெனி துணை ராணுவத்தினர், 8 டிஎஸ்பிக்கள், 26 இன்ஸ்பெக்டர்கள், 332 எஸ்ஐக்கள், போலீசார், ஊர்க்காவல் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளர் ஏடிஜிபி ஹேமச்சந்திரன், எஸ்பி சுதாகர் மற்றும் அதிகாரிகள், பதற்றமான வாக்குச் சாவடிகளை நேரிடையாக கண்காணித்து வருகின்றனர். கூடுதலாக மத்திய மண்டலத்தில் பணிபுரியும் 3,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குச் சாவடிகளில் வன்முறை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. அதன்பின்னர் மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக அரசு மகளிர் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்படும். வாக்குகள் பதிவான இயங்திரங்கள் வைக்கப்படும் வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி காலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். பிற்பகலுக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment