Wednesday,May, 16, 2012சென்னை::அ.தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனையை ஒட்டி, சட்டசபையில் இன்று பாராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, சாதனைகளின் தொகுப்பு புத்தகத்தையும், திட்டங்கள் பற்றிய சி.டி.,யையும், முதல்வர் ஜெயலலிதா வெளியிடுகிறார். சட்டசபைக்கு வரும் முதல்வருக்கு, வழிநெடுக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தேர்தல் முடிவுகள், மே 13ம் தேதி வெளிவந்த நிலையில், மே 16ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது. முதல்வராக பதவியேற்ற தினத்தன்றே, ஏழு முக்கிய அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமான கோப்புகளில், ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதை தொடர்ந்து, சட்டசபையில் நடந்த கவர்னர் உரை, பட்ஜெட் போன்றவற்றிலும் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள் மாநாட்டிலும், புதிய அறிவிப்புகள் பலவற்றை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். தொடர்ந்து, இந்த ஆண்டு கவர்னர் உரை மற்றும் பட்ஜெட் உரைகளில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கடந்த ஓராண்டில், இலவச அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு லேப்-டாப், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்திட்டம், தாலிக்கு தங்கம், முதியோர் ஓய்வூதியம் உயர்வு உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க., அரசின் ஓராண்டு நிறைவு தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக, கடந்த 12ம் தேதியே முடிவடைய இருந்த சட்டசபை கூட்டத்தொடர், இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலக வளாகம் முழுவதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சட்டசபையும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இன்று சட்டசபையில் கேள்வி நேரம் கிடையாது. சட்டசபை துவங்கியதும், அரசின் ஓராண்டு சாதனைகளை பாராட்டி, ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் பேச உள்ளனர். இறுதியாக, முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க உள்ளார். இதன் பின், சட்ட மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளன. இத்துடன் சட்டசபை, மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படும். இன்று சட்டசபை கூடுவதற்கு முன், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. முதலாவதாக, கடந்த ஓராண்டில் அ.தி.மு.க., அரசு செய்த சாதனைகள் தொகுக்கப்பட்ட புத்தகத்தை, முதல்வர் வெளியிடுகிறார். அடுத்ததாக, தமிழக அரசின் திட்டங்களது செயல்பாடு குறித்து தயாரிக்கப்பட்டுள்ள, சி.டி.,யை முதல்வர் வெளியிடுகிறார். இதற்காக, தலைமைச் செயலகத்துக்கு வரும் முதல்வருக்கு, போயஸ் கார்டனில் இருந்து வழிநெடுக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும், அ.தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர். வழிநெடுகிலும், அரசின் சாதனைகளை விளக்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment