Sunday, May, 20, 2012பெரியகுளம்::சென்னையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்க தலைவர் விவேக், தேனி கோர்ட்டில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் போலீஸ் தேடுதல் வேட்டையும் கெடுபிடிகளும் தீவிரம் அடைந்துள்ளதால் மாவோயிஸ்ட்கள் தமிழகத்தில் களம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளை வேகமாக செய்து வருவதாகவும் தமிழக போலீசுக்கு மத்திய உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பின் தமிழக தலைவர் என கூறப்படும் விவேக் (எ) பாலன் (எ) குமார் (45) ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனைவியுடன் சென்னை வந்திருப்பதாக க்யூ பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் சென்று செனாய் நகரில் ஒரு இடத்தை முற்றுகையிட்டனர். அதிரடியாக உள்ளே புகுந்து விவேக்கை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அவரது மனைவி பத்மா தப்பிவிட்டார்.
பிடிபட்ட விவேக், 2007-ம் ஆண்டில் பெரியகுளம் பகுதி காட்டுக்குள் பல இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது விசாரணையில் தெரியவந்தது. அப்போது போலீஸ் வேட்டையின்போது விவேக் தப்பி ஓடிவிட்டார். சுந்தரமூர்த்தி என்பவர் மட்டும் சிக்கினார். விவேக்கை போலீசார் தேடி வந்தனர். 2004-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காட்டுப்பகுதியில் நக்சலைட்கள் முகாம் நடத்தி ஆயுத பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்தை சுற்றிவளைத்தபோது போலீசாருக்கும் நக்சல்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் சிவா (எ) பார்த்திபன் சுட்டுக் கொல்லப்பட்டார். பத்மா உள்பட சிலர் காயங்களுடன் தப்பினர். அதன் பிறகு பத்மாவை விவேக் திருமணம் செய்து கொண்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
சென்னைக்கு அவர்கள் இருவரும் வந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்ததும், அவர்களை உயிருடன் பிடிக்க ரகசியமாக திட்டம் தீட்டினர். ஆனால், விவேக் மட்டும் சிக்கினார். பத்மா தப்பிவிட்டார். கைது செய்யப்பட்ட விவேக் மீது பெரியகுளம் கோர்ட் வாரன்ட் பிறப்பித்திருந்ததால், அவரை பலத்த பாதுகாப்புடன் க்யூ பிரிவு போலீசார் இன்று காலை தேனிக்கு அழைத்து வந்தனர். பெரியகுளம் கோர்ட் நீதிபதி விடுப்பில் சென்றதால், தேனி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட் மாஜிஸ்திரேட் ராஜ்குமார் முன்பு அவரை ஆஜர்படுத்தினர். விவேக்கை ஜூன் 1-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை கொண்டு வந்து மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட விவேக்கின் சொந்த ஊர் திண்டுக்கல் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது ‘இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் வாழ்க.. போடாதே போடாதே, பொய் வழக்கு போடாதே’ என விவேக் கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment