
Sunday, May, 20, 2012இலங்கை::நாடு பெற்றுக் கொண்ட வெற்றியைப் பாதுகாக்க நாம் பொறுமையுடனும் அதேவேளை தூரதிருஷ்டியுடனும் செயற்படவேண்டியது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
எமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எம்மிடம் பலம் உள்ளது. முப்பது வருட பின்னடைவிற்குப் பின்னர் நாடு தலைதூக்கியுள்ள நிலையில் பயங்கரவாத ஒழிப்பில் உதவியது போன்று சர்வதேச நாடுகள் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற யுத்த வெற்றிப் பெருவிழாவிலிருந்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி; வடக்கில் நிர்வாக நடவடிக்கைகளில் படையினரை அரசாங்கம் ஈடுபடுத்தவில்லை எனவும் எனினும் அச்சுறுத்தல்கள் நீங்கும் வரை படையினர் முகாம்கள் அங்கிருக்கும் எனத் தெரிவித்தார். அத்துடன் இனங்களுக்கிடையிலான பேதங்களுக்கு இனி இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
யுத்த வெற்றியின் மூன்றாமாண்டை நினைவுகூரும் மாபெரும் தேசிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுக் காலை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.
முப்படைகளின் அணிவகுப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், முப்படைத்தளபதிகள் வெளிநாட்டு ராஜதந்திரிகள், மதத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியுள்ள முப்படைத் தளபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கும் கெளரவமாக 21 பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு தேசிய கீதம் மற்றும் தேசியக் கொடி ஏற்றலுடன் நேற்றைய இந்த யுத்த வெற்றிகொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாயின.
இந்த மாபெரும் தேசிய நிகழ்விலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
மே 19ம் திகதி நாட்டின் வரலாற்று தினமாகும். நாடு ஒரே கொடியின் கீழ் கொண்டுவரப்பட்ட வெற்றியின் மூன்றாவது வருட நிறைவு விழா இதுவாகும். வடக்கில் பணயக் கைதிகளாய் வைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்களை விடுவிக்கவும் மரண அச்சுறுத்தலிலிருந்த நாட்டு மக்களை அதிலிருந்து பாதுகாக்க தாய் நாட்டின் விடுதலை நாள் இது.
நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்பதற்காக முப்படையினரும் தமது உயிரைத் தியாகம் செய்து எமக்கு வாழ்வளித்துள்ளனர். அதன் மூலம் மக்களின் நுன்ப, துயரம் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டைப் பாதுகாத்து எதற்கும் அடிபணியாத சுயாதீன நாடாக நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளோம்.
யுத்தம் முடிவுற்ற பின்னர் படை வீரர்களை எதற்காகப் பயன்படுத்தலாம். அவர்களுக்கு வீண் செலவுகள் ஏன்? என யுத்தம் முடியும் முன்னரே விமர்சித்தவர்களுக்கு நாம் ஒன்றைக் கூற விரும்புகின்றோம். யுத்தத்தின்போது நாட்டுக்காக அவர்கள் செய்த பணியைப் போலவே யுத்தம் நிறைவு பெற்று அமைதி நிலவும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாக்கவும் அபிவிருத்தியில் மட்டுமன்றி நாட்டை எழில் படுத்துவதிலும் அவர்களின் பணி தொடரும். அதேவேளை நாட்டிற்கு கெளரவமான சமாதானத்தைப் பெற்றுத்தந்த அவர்களுக்கு சகல வரப்பிரசாதங்களையும் வழங்கி அவர்களைக் கெளரவப்படுத்தி மகிழ்வதிலும் நாம் முன்னிலை வகிக்கின்றோம். உலகில் வேறு எங்கும் படையினருக்கு இத்தகைய கெளரவம் வழங்கப்படுவதில்லை.
முப்பது வருட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மூன்று வருடமே நிறைவுற்ற நிலையில் பின்னடைவுற்றிருந்த நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடிந்துள்ளது. நாட்டில் தற்போது அவசரகாலச் சட்டம் நடைமுறையிலில்லை. அதியுயர் பாதுகாப்பு வலயங்களில்லை. அகதி முகாம்கள் இல்லை. வீதி சோதனைசாவடிகள் இல்லை. 30 வருடங்களாக வடக்கு கிழக்கில் நடமாடிய ஆயுதக் குழுக்கள் தற்போது நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ளன.
கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களுக்கான மீன்பிடி கடல் எல்லைகள் இப்போது இல்லை. பாதாள உலகக் குழு- போதைவஸ்து ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் நடைமுறையிலுள்ளன. தடைகள் இல்லாத நாடாக இப்போது இலங்கை திகழ்கிறது. எனினும் சிலரது மனங்களில் சிந்தனைகளிலுள்ள தடைகள் நீங்காத நிலையிலேயே உள்ளன. நாட்டில் சமாதானம் நிலவுவதை ஏற்க அவர்கள் மறுக்கின்றனர்.
வடக்கு கிழக்கு நிர்வாக சேவைகளில் படையினர் ஈடுபடுத்தப்படவில்லை. அரச நிர்வாக சேவையே அங்கு நடைமுறையிலுள்ளது. எனினும் வடக்கிலிருந்து படையினர் முகாம்களை அகற்றுமாறு கேட்கிறார்கள்.
புலம்பெயர் தமிழர் அமைப்பின் செயற்பாடுகள், கோரிக்கைகள், எதிர்ப்பு நடவடிக்கைகள் அப்படியே உள்ள நிலையில் வடக்கிலிருந்து படைகளை அகற்ற முடியுமா? வடக்கில் மட்டுமல்ல தேசிய பாதுகாப்புக்காக தெற்கிலும் பாதுகாப்புப் படை முகாம்கள் உள்ளன.
இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு. அதேவேளை சகல சர்வதேச நாடுகளுடன் சிறந்த நட்புறவுகளைக் கொண்டு செயற்படும் அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடு. எமது பிரச்சினைகளைத் தீர்க்க எம்மிடம் பலம் உள்ளது. பொருளாதார அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பும் இலக்கு எம்மிடமுண்டு. இப்போது தான் நாம் தலைதூக்க ஆரம்பித்துள்ளோம். எமக்கு அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியம்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எமது அயல் நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் எமக்கு உதவியுள்ளன. அதனை நாம் மறக்கமாட்டோம். அதேபோன்று நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதிலும் சர்வதேச நாடுகள் எமக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை நாம் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளோம். எந்த அழுத்தங்களுக்காகவும் நாம் இவற்றைச் செய்யவில்லை. எமக்கான பொறுப்பினை நாம் ஒருபோதும் தட்டிக்கழிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment