Sunday, ,May, 27, 2012சென்னை: தமிழகத்தில் கடுமையான டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டீசல் இல்லாததால் கனரக வாகனங்கள் ஆங்காங்கு நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. டாக்சிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ளன. ஜெனரேட்டர்களை இயக்க முடியாததால் வர்த்தக, தனியார் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. எம்ஆர்பிஎல் (மங்களூர்), சிபிசில் (எண்ணூர்) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் டீசல் உற்பத்தியை குறைத்ததே திடீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மின்வெட்டு காரணமாக டீசல் தேவை அதிகரித்துள்ளது மற்றொரு காரணம்.
சென்னை நகருக்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. கடந்த 3 நாட்களாக இந்த அளவுக்கு சப்ளை இல்லை என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெரும்பாலான பங்க்குகளில் Ôடீசல் ஸ்டாக் இல்லைÕ போர்டு வைத்துவிட்டு பங்க்குகளை மூடிவிட்டனர். டீசல் இல்லாததால் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை ஓட்டமுடியாமல் ஆங்காங்கு நிறுத்தியுள்ளனர். நீண்ட தொலைவு செல்லும் லாரிகள் வழியில் டீசல் பிடிக்க முடியாமல் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாளில் சரக்குகள் செல்லாததால் கோடி கணக்கில் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. டீசல் பற்றாக்குறையால் தனியார் பஸ் சர்வீஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ்கள் மட்டுமே இயங்குகின்றன. அவர்களிடம் 3 நாட்களுக்குத் தேவையான ஸ்டாக் உள்ளது. அது தீர்ந்து சப்ளை வராவிட்டால் அரசு பஸ் சேவையும் முடங்கும் அபாயம் உள்ளது. டாக்சிகளின் ஓட்டமும் குறைந்து விட்டது. மின்வெட்டை சமாளிக்க கைகொடுத்த ஜெனரேட்டர் இயக்கமும் டீசல் கிடைக்காததால் முடங்கி விட்டது. இதனால், தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஜவுளித் தொழில், கோவையில் ஸ்பின்னிங் மில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குளுகுளு ஏசியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின் பற்றாக்குறையால் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் ஜெனரேட்டர் உதவியுடன்தான் இயங்கி வந்தன. இப்போது டீசல் பற்றாக்குறையால் கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்பும், வருவாய் பாதிப்பும் பலரை பாதித்துள்ளது. தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் கண்ணன் கூறுகையில், டீசலை பதுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பற்றாக்குறைக்கு ஆயில் நிறுவனங்களே காரணம். சப்ளை இல்லாததற்கு காரணத்தை ஆயில் நிறுவனங்கள்தான் விளக்க வேண்டும் என்றார். ஐஓசி உயர் அதிகாரி கூறுகையில், ஓரிரு தினங்களில் தட்டுப்பாடு நீங்கும் என்றார்.
No comments:
Post a Comment