Sunday, May 27, 2012

முல்லை பெரியாறு விவகாரம் சோதனைக்காக போட்ட துளையை அடைக்கும் பணியை தடுப்பதா? பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

Sunday, ,May, 27, 2012
சென்னை::முல்லை பெரியாறு அணையில் போட்ட துளையை அடைக்கும் பணியை மேற்கொள்ளும் தமிழக அரசு அதிகாரிகளை தடுக்க கூடாது’ என்று கேரள அரசுக்கு அறிவுறுத்துமாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவினர் முல்லை பெரியாறு அணையின் உறுதித் தன்மையை அறிவதற்காக அணையில் துளை போட்டு சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிந்துவிட்டது. பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், அணையில் போடப்பட்ட துளைகளை அடைக்க வேண்டும். இந்த பணியை செய்ய சென்ற தமிழக அரசு அதிகாரிகளை கேரள அரசு தடுத்துள்ளது. இந்த விஷயத்தை கேரள அரசின் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு சென்றும் எந்த பதிலும் இல்லை. இருப்பினும், தமிழக அரசின் பொறியாளர்கள் அணையில் அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய பணியைக்கூட செய்ய விடாமல் கேரளா போலீசார் தடுக்கின்றனர். கேரள அரசின் இந்த போக்கு கண்டனத்துக்கு உரியதாகும்.

எனவே, முல்லை பெரியாறு அணையில் உள்ள துளையை அடைக்கும் முக்கிய பணியை தடுக்க கூடாது என்று தாங்கள் கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். கேரள அரசின் கட்டுக்கு அடங்காத போக்கை சுட்டிகாட்டியும், சிஆர்பிஎப் போலீசை பாதுகாப்பிற்கு நிறுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. தனது சொந்த பாதுகாப்பு படையை நிறுத்துவதை தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்...

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அதிமுக 29ம் தேதி ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அதிமுக 29ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ7.50 உயர்த்தியுள்ளது. இந்தக் கடும் விலை உயர்வினைக் கண்டித்து ஏற்கெனவே நான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். இந்த விலை உயர்வை நாடே கடுமையாக எதிர்க்கிறது. பொருளாதார சூழலில் இவ்வளவு கடுமையான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது என்பதால், இந்த விலை உயர்வை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், பண வீக்கத்தை கட்டுப்படுத்தாமல், பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ7.50 அளவுக்கு உயர்த்தி மக்களை பெருத்த இன்னலுக்கு ஆளாக்கியுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் கட்சியின் 52 மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும் வரும் 29ம் தேதி காலை காலை 11 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment