Saturday, ,May, ,26, 2012சென்னை::ஐபிஎல் சீசன்5 இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்து மோதும் அணியை நிர்ணயிக்கும் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. சென்னை டெல்லி அணிகள் மோதின. டாசில் வென்ற டெல்லி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக விஜய் ஹசி களமிறங்கினர். முதல் ஓவரில் இருந்தே சென்னை ரன்வேட்டை நடத்தியது. குறிப்பாக முரளிவிஜய் விஸ்வரூபம் எடுத்தார். அவர் 58 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சருடன் 113 ரன் விளாசினார். பிராவோ 33, ரெய்னா 27, டோனி 23, ஹசி 20 ரன் எடுத்தனர். இதனால் சென்னை 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது.அதன்பின் டெல்லி களமிறங்கியது. வார்னர் 3, சேவாக் 1 ரன்னில் வெளியேற டெல்லியின் தோல்வி 4 ஓவர்களிலேயே தெரிந்துவிட்டது. ஜெயவர்த்தனே மட்டும் போராடி 55 ரன் எடுத்தார். டெய்லர் 24, ரசல் 16 ரன் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்னில் டெல்லி சுருண்டது. இதனால் சென்னை 86 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 3வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. சென்னை தரப்பில் அஸ்வின் 3, ஜகதி 2, ஹில்பன்ஹாஸ், மோர்க்கல், பிராவோ தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
கேப்டன்ஸ் கார்னர்
டோனி: இது ஒரு தனிப்பட்ட ஆட்டத்தால் கிடைத்த வெற்றி. விஜய், ஹசி அற்புதமாக தொடக்கத்தை தந்தனர். ரெய்னா ரன்வேகத்தை அதிகப்படுத்தினார். கடைசி ஓவர்களை பிராவோ சிறப்பாக பயன்படுத்தி ரன் குவித்தார். தனிப்பட்ட முறையில் டெல்லி அணியும் மிகச்சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. ஆனால் இந்த இலக்கை அவர்களால் எட்ட முடியவில்லை. எங்களுக்கு எல்லாமே சாதகமாக அமைந்தது. லீக் போட்டி முடிவில் இருந்து நடந்த எதுவுமே நம்பும் வகையில் இல்லை. எங்களுக்கு பக்கபலமாக இருந்த அணி உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். கடைசியாக பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டோம். சாம்பியன்லீக்கிற்கு விளையாடவும் தகுதி பெற்று விட்டோம். சேவாக்: முரளிவிஜய் ஆட்டத்தை எங்களிடம் இருந்து எடுத்து சென்று விட்டார். அவர்களிடம் மிகச்சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. அவர்கள் பேட்டிங் மூலம் ஆட்டத்தில் வெற்றி கண்டுவிட்டனர். இருப்பினும் மோர்னே மோர்க்கல் இடம்பெறாதது மிகப்பெரிய தவறாக மாறிவிட்டது. பதான் காயமடைந்ததால் அதை சரிகட்ட மோர்க்கலை நீக்க வேண்டிய முடிவை எடுத்தோம். சென்னை ஆடுகளத்தில் 180 ரன் குவித்திருந்தால் வெற்றி பெற்றிருந்திருக்கலாம். ஆனால் கூடுதலாக 40 ரன்கள் என்பது எட்ட முடியாத ஒன்று.
ஹீரோ கார்னர்
ஆட்டநாயகன் விருது பெற்ற முரளிவிஜய் கூறுகையில், முதலில் நான் அணி உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவர்களது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் எதுவும் நடந்திருக்காது. சென்னை களம் பற்றி எனக்கு நன்கு தெரியும். எனவே முதல் பந்தில் இருந்து அடித்து ஆட முடிவு செய்தேன். 6வது ஓவருக்கு பிறகு களம் மெதுவாக மாறியது. எனவே கடைசிவரை களத்தில் நிற்க முடிவு செய்தேன். இன்று எனக்கு அதிர்ஷ்டமான நாள். ஒரே அணியாக செயல்பட்டு அதிலிருந்து அதிகம் கற்று கொண்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
சென்னைக்கு வெற்றியை பரிசளித்த டெல்லி
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி எடுத்த அடுத்தடுத்த சில முடிவுகள் போட்டி தொடங்கும் முன்பே முடிவை நிர்ணயித்துவிட்டது. முதலில் டெல்லி அணியில் காயமடைந்திருந்த பதான் நீக்கப்பட்டால் வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் தான் இடம்பெற முடியும் என்ற அடிப்படையில் வார்னர், ஜெயவர்த்தனே, டெய்லர், ரசல் ஆகியோருக்கு மட்டும் சேவாக் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்து இந்த ஐபிஎல் சீசனில் 25 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ள மோர்னே மோர்க்கலை நீக்கி முட்டாள்தனமான முடிவை எடுத்தார். அடுத்ததாக எந்தவித பிரபலமும் இல்லாத சன்னிகுப்தாவை சென்னை வீரர் என்ற அடிப்படையில் களமிறக்கியதும் மட்டுமின்றி அவரை முதல் ஓவரை வீச செய்தார். அவர் வீசிய 3 ஓவர்களில் சென்னை 47 ரன் விளாசியது.
வருண்ஆரோன் 4 ஓவர்கள் வீசி 63 ரன் விட்டு கொடுத்தார். இதையெல்லாம்விட சேவாக் தொடக்க வீரராக களமிறங்காமல் 3வது களமிறங்கியதும் பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னை போன்ற மெதுவான மைதானங்களில் சிறப்பாக பந்துவீசும் அகர்கரை பயன்படுத்தாததும் டெல்லிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் டாசில் வென்றுவிட்டு சென்னை மைதானத்தில் 2வதாக பேட் செய்ய தீர்மானித்தது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.
விஜய் சாதனை
* டெல்லி அணிக்கு எதிராக சதம் அடித்த சென்னை கிங்ஸ் அணியின் முரளி விஜய், ஐ.பி.எல்., வரலாற்றில் இரண்டு சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக இவர், 2010ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் 56 பந்தில் 127 ரன்கள் எடுத்தார்.
* ஐ.பி.எல்., அரங்கில் இரண்டு அல்லது அதற்கு மேல் சதம் அடித்த நான்காவது வீரரானார் முரளி விஜய். ஏற்கனவே கெய்ல் (3 சதம்), கில்கிறிஸ்ட் (2), வார்னர் (2) ஆகியோர் இச்சாதனை படைத்து உள்ளனர்.
* நேற்று 113 ரன்கள் எடுத்த முரளி விஜய் 51 பந்தில் சதம் அடித்தார். இது, ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் பதிவுசெய்யப்பட்ட அதிவேக சதம். முன்னதாக பெங்களுர் அணியின் கெய்ல், டெல்லி அணிக்கு எதிராக 53 பந்தில் சதம் அடித்தார்.
* இது, ஐ.பி.எல்., அரங்கில் பதிவு செய்யப்பட்ட 24வது சதம். இத்தொடரில் பதிவு செய்யப்பட்ட 6வது சதம். முன்னதாக கெய்ல் (128*) வார்னர் (110*) ரோகித் சர்மா (109*) ரகானே (103*) பீட்டர்சன் (103*) ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
No comments:
Post a Comment