Sunday, May, 20, 2012இலங்கை::நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கம் தொடர்பாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
மூன்று ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக பணியகத்தின் தலைவர் கலாநிதி என்.பி.விஜயானந்த தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 1.45 அளவில் பதுளை, பண்டாரவளை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நிலத்துக்கு கீழ் ஏற்பட்ட இயற்கை மாற்றம் காரணமாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அது பல்லேகெல நில நடுக்க மானியில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இந்த நிலநடுக்கத்திற்கு பின்னரான எவ்வித நிலநடுக்கமும் உணரப்படவில்லை என புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மக்கள் அநாவசிய அச்சம் கொள்ளத்தேவையில்லை என பணியகத்தின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.
இதனடியே இத்தகைய நிலைமையின்கீழ் எதிர்காலத்தில் கட்டடங்களை நிர்மாணிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண் சரிவுகள் பிரிவின் அதிகாரி ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கை மக்கள் நிலநடுக்கத்தை உணரும் சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய அதிர்வுகள் தாக்குபிடிக்கக்கூடிய வகையில் கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பாக மக்கள் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண் சரிவுகள் பிரிவு அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment