Monday, May 21, 2012

பிராந்தியத்தின் பொருளாதார கேந்திர நிலையமாக இலங்கையை உருவாக்குவோம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, May, 21, 2012
இலங்கை::இலங்கை மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வருவதுடன், சமாதானத்தை நீடித்து நிலைக்கக் கூடியதாக்குவதற்கும், பொருளாதார சுபீட்சத்தை அடைந்து கொள்வதற்கும் அவர்கள் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் டோஹா மாநாட்டில் தெரிவித்தார்.

இறைமையுள்ள ஒரு நாடு என்ற வகையில் நாம் நிமிர்ந்து நின்றால் மட்டுமே இதனைச் செய்ய இயலும். மக்களைப் பொருளாதார ரீதியில் பலப் படுத்தவும், இணக்கப்பாட்டின் ஊடாக நிலையான சமாதானத்தை அண்மித்துக் கொள்ளவும் தேவையானவற்றைச் செய்வதற்கு அரசு அர்ப்பண சிந்தையுடன் இருப்பதாகவும், அந்த தேசிய செயற்பாட்டில் ஏற்கனவே இணைந்து இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கட்டார் அமீர் ஷேய்க் ஹமாட் பின் கலீபா அல் தாணியின் அழைப்பில் விசேட அதிதியாக ஜனாதிபதி இம்மாநாட்டில் பங்குபற்றுகிறார்.

1931ல் சர்வசன வாக்குரிமை பெற்ற ஆசியாவின் பழைய ஜனநாயக நாடான இலங்கை, சமாதானம், செளபாக்கியத்துடன் கூடிய புதிய யுகத்தை நோக்கிப் பயணிக்கும் வேளையில் டோஹா பொருளாதார மாநாட்டில் உரையாற்றக் கிடைத்தமை மகிழ்ச்சி தருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சிங்களவர், தமிழர், முஸ்லிம், மலே, பறங்கியர் என சகலரும் 30 வருடகாலம் நிலவிய பயங்கரவாதத்தால் நன்றாகப் பாதிக்கப்பட்டவர்கள்.

உணவில் தன்னிறைவைக் காணும் இலக்கை நோக்கி இலங்கை வேகமாக செல்கிறது. வர்த்தகத்தையும், வாணிபத்தையும் அடிப்படையாக்கி வலயத்தில் பொருளாதார நிலையமாக மாறுவது இலங்கையின் திடசங்கற்பமாகி உள்ளது.

கல்வி, புதிய தொழில்நுட்பம் தொடர்பாக நாம் விழிப்புடன் செயல்படுகிறோம். ஆசிய வலயத்தில் அறிவின் கேந்திர மையமாக துரிதமாக மாற்றும் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டை நோக்கி மிகவேகமாக பயணிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

டோஹா பொருளாதார சம்மேளனத்தில் விசேட அதிதியாகக் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அதிகாலை கட்டார் சென்றடைந்தார்.

கட்டார் நாட்டின் அமீர் ஷேய்க் ஹமாட் பின் கலீபா அல் தாணியின் அழைப்பையேற்றே அவர் அங்கு சென்றுள்ளார்.

கட்டார் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், கட்டாரிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜயந்த பளிபான உட்பட தூதுவராலய சிரேஷ்ட அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.

84 நாடுகளின் 600 பேராளர்கள் வரை பங்குபற்றும் டோஹா பொருளாதார மாநாட்டின் 12வது தொடர் அமர்வு கட்டார் அமீர் அஷேய்க் ஹமாட் பின் கலீபா அல் தாணியின் தலைமையில் நடைபெறுகிறது.

மத்திய கிழக்கின் பொருளாதார முன்னேற்றம் குறித்து இம்மாநாட்டில் ஆராயப்படுகிறது. மத்திய கிழக்கு, ஐரோப்பா. அமெரிக்கா உட்பட ஆசிய நாடுகளும் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றன.

கட்டார் டோஹா நகரில் ஷெரட்டல் ஹோட்டலில் நேற்று ஆரம்பமான இம்மாநாடு 23ஆம் திகதிவரை நடைபெறுகிறது. நீண்டகாலமாக இவ்வலயத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில்கொண்டு தற்போதைய அரசியல், பொருளாதார, மானிட, சமூக பிணக்குகள், நிதிசார் உபமுறைகள் தொடர்பாக மாநாட்டில் ஆராயப்படும். மத்திய கிழக்கு உட்பட மற்றைய நாடுகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதும் இம்மாநாட்டின் நோக்கமாகும்.

எரிபொருள் மற்றும் வாயு இந்நாட்டின் வளங்களாகும், இங்கு உலகில் அதிஉயர்ந்த தனிநபர் வருமானம் பதிவாகியுள்ளது.

கட்டார்-இலங்கை ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 15 வருடங்களாகியுள்ளன. அங்கு ஓர் இலட்சம் இலங்கையர்கள் வரை தொழில்புரிகின்றனர். இலங்கையில் அரச தலைவர் ஒருவர் கட்டாருக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

இந்த விஜயம் இருநாட்டு உறவுகளில் முக்கிய கட்டமாக கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் கட்டார் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தார். இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் கட்டார் தலைவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிஉறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் பங்கு பற்றுகின்றனர். (எப்.எம்)

No comments:

Post a Comment