Saturday, May 19, 2012

தெரிவுக் குழுவில் இடம்பெறுவது குறித்து கூட்டமைப்பு - ஐ.தே.க பேச்சுவார்த்தை!

Saturday, May, 19, 2012
இலங்கை::தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கான சூழலை உருவாக்குவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பான தமது கட்சியின் யோசனைகள் ஏற்கனவே அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

வடக்கிற்கு அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்காக நியமிக்கப்படும் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பாக அரசாங்கத்திடம் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன, இந்த பேச்சுவார்த்தைகளின் நம்பகத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும், பேச்சுவார்த்தைகளில் வெளிப்படைத் தன்மை காணப்படவேண்டும் அதேபோன்று பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலும் கால அட்டவணையும் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.

மேலும் பேச்சுவார்த்தைகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமாயின் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதை போன்று அரசாங்கமும் எதிர்க் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் அண்மைக்காலமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தன, இதன்போது முன்னிலைப்படுத்தப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதை ஐ.தே.க ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் முதற்கட்ட கலந்துரையாடலின்போது அறிவித்தது. இது தொடர்பான இணக்கப்பாட்டினை அரசாங்கம் எமக்கு அறிவித்தது. இது தொடர்பாக கூட்டமைப்புடன் ஐ.தே.க கலந்துரையாடியுள்ளது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தமிழ் தேசியக் கூட்மைப்பு சிறிதளவிலான திருத்தங்களையே முன்வைத்துள்ளது. இந்த திருத்தங்களையும் அரசாங்கத்தின் இணக்கப்பாட்டிற்காக நேற்றைய தினம் ஐ.தே.க சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்படும் இணக்கப்பாட்டிற்கு அமையவே பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது தொடர்பான இறுதித் தீமானம் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment