Saturday, May 19, 2012

ஹிலரி - பீரிஸ் சந்திப்பு!

Saturday, May, 19, 2012
அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல் பீரிஸ் அந்த நாட்டின் இராஜங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இருவரும் சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் ஊடகப் பேச்சாளர் விக்டோரியா நியூலண்டன் கூறியுள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைப் செயற்படுத்துவது மாத்திரமல்லாது பொறுப்புடைமை செயற்பாடு, நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது, நாட்டுக்குள்ளேயும் வெளியிலும் மக்களின் நம்பகத் தன்மையை வெற்றிகொள்வதற்காக வெளிப்படையான முயற்சிகள் தேவை என ஹிலரி கிளிண்டன் கூறியுள்ளார்.

அத்தோடு வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவது, வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மனித உரிமைகளைப் பாதுகாப்பது போன்ற விடயங்களும் அவசியம் என அமெரிக்க இராஜங்க செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாகவும் அங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாகவும் ஹிலரி கிளிண்டன் மேலும் கூறியுள்ளார்...

இச் சந்திப்பின் போது, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல் படுத்துவது தொடர்பான அறிக்கை ஒன்று பீரிஸினால் கிளாரி கிளிங்டனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவினை மேலும் அதிகரித்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் அமைச்சர், அமெரிக்க வர்த்தக குழுவினரையும் சந்தித்துள்ளார்.

No comments:

Post a Comment