Thursday, May 24, 2012

அதிரடியால் மிரட்டினார் டோனி: மும்பையை வென்றது சென்னை!!

Thursday, May, 24, 2012
சென்னை::ஐபிஎல் பிளேஆப் சுற்று எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூரில் நேற்று சென்னை மும்பை அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. முரளிவிஜய் 1, ரெய்னா 0 என அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்த போதும் ஹசி, பத்ரிநாத் ஜோடி ஆரம்பத்தில் நிலைத்து நின்று ஆடி பின்னர் அதிரடி காட்டியது. ஹசி 39 பந்தில் 1 சிக்சர், 8 பவுண்டரியுடன் 49 ரன்னும், பத்ரிநாத் 39 பந்தில் 1 சிக்சர், 6 பவுண்டரியுடன் 47 ரன்னும் எடுத்தனர். கடைசிகட்டத்தில் கேப்டன் டோனி 20 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரியுடன் 51 ரன்னும், பிராவோ 14 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 33 ரன்னும் விளாசினர். டோனி ஹெலிகாப்டர் ஷாட்டிலும், பிராவோ பிளையிங் ஷாட்டிலும் ரன்குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். கடைசி 5 ஓவரில் மட்டும் சென்னை அணி 70 ரன்களுக்கு மேல் குவித்து மிரட்டியது. மும்பை தரப்பில் குல்கர்னி 3, பொல்லார்டு, பிராங்க்ளின் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
188 ரன்கள் இலக்குடன் மும்பை ஆடியது. சச்சின் 11 ரன் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

அதிரடியாக ஆடிய ஸ்மித் 22 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரியுடன் 38 ரன் எடுத்து ஜகதி பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த ரோகித்சர்மா 14, தினேஷ்கார்த்திக் 6 ரன்களில் மோர்க்கல் பந்தில் வீழ்ந்தனர். பிராங்க்ளின் 13, அம்பாதிராயுடு 11, பொல்லார்டு 16, ஹர்பஜன்சிங் 1, மலிங்கா 17 என வரிசையாக பெவிலியனுக்கு நடையை கட்டினர். முடிவில் மும்பை அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்றது. மோர்க்கல், பிராவோ தலா 2, ஜகதி, ஹில்பன்ஹாஸ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சென்னை அணி அசத்தியது வியப்பாக இருந்தது. டோனி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கேப்டன்ஸ் கார்னர்
டோனி: ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டை பறிகொடுத்த போதும் பத்ரிநாத், ஹசி ஆகியோர் சிறப்பாக ஆடி அடித்தளம் அமைத்து கொடுத்தனர். வெற்றியின் புகழ் அவர்களைதான் சாரும். பத்ரிநாத் பிரபலமாகாத ஹீரோவாக வலம் வருகிறார். இவர்கள் சிறப்பாக ஆடியதால் கடைசி கட்டத்தில் நானும், பிராவோவும் அதிரடியாக ஆட முடிந்தது. ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.

ஹர்பஜன்சிங்: பிளேஆப் சுற்று எங்களுக்கு துரதிருஷ்டவசமாக அமைந்துவிட்டது. சென்னை அணி உண்மையான சாம்பியன் அணி போல ஆடியது. டோனியின் அதிரடி ஆட்டம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. ஆட்டத்தை எங்கள் கையில் இருந்து பறித்துவிட்டார். பேட்டிங்கில் ஒட்டுமொத்தமாக சொதப்பிவிட்டோம்.

No comments:

Post a Comment