Sunday, ,May, 27, 2012இலங்கை::பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தார்கள் எனும் சந்தேகத் திலும், உறுதியாகக் கிடைத்த ஆதாரங் களினது அடிப்படையிலும் கைது செய்யப் பட்டு கடந்த பல வருடங்களாக சிறை களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தம்மை விடுதலை செய்யக் கோரி கடந்த வாரம் சுமார் எட்டு நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யுத்தம் நிறைவிற்கு வந்து மூன்று வருடங்களாகிவிட்டது. தம் மீதான விசாரணை மட்டும் முடிவிற்கு வரவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டாக இருந்தது. தம்மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி தம்மை விடுதலை செய்யுமாறு, அவர்கள் கோரிக்கை ஒன்றினை விடுத்தே உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
பின்னர் அரசாங்கம் அவர்களது பிரச்சினையை ஒரு மாத காலத்தினுள் தீர்த்து வைப்பதாகத் தெரிவித்த உறுதி மொழியைத் தொடர்ந்து அவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.
இவ்விடயம் கடந்தவாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற் படுத்தியிருந்தது. அவ்விடயம் தொடர்பாக ஆளும், எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்ட போது அவர்கள் கூறிய கருத்துக்களை அப்படியே தருகின்றோம்.
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைதிகளை பிழையாக வழிநடத்தி வருகிறது. உண்ணாவிரதப் போராட்டங்கள் போன்றவற்றின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
சில சக்திகளின் பிழையான வழிநடத்தல் காரணமாகவே வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிகளை நாம் படிப்படியாக விடுவித்துக் கொண்டே வருகின்றோம். அரசாங்கம் உறுதியளித்த பின்னரும் கடந்தவாரம் வவுனியாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பொய்யாகவே சத்தியாக்கிரகத்தை நடத்தியுள்ளனர். சிறைச்சாலைகள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியன கூட்டாக இணைந்து, இந்த மாத இறுதிக்குள் கைதிகள் தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு கொண்டுவரவுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
அரசியல் கைதிகளாக எவரும் சிறைகளில் இல்லை, விடுதலைப் புலி உறுப்பினர்களும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக ஒரு மாத காலத்தினுள் கொழும்பு, அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் மேல் நீதிமன்றங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களில் 359 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 309 பேர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட சில சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட சில முன்னாள் புலிகள் கைது செய்யப்பட்டனர். மேற்படி நபர்கள் மோசமான பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதால் மீண்டும் விசாரணை செய்வதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு அளவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட 359 பேரினதும் விடுதலை தொடர்பான பிணை நீதிமன்றத்தின் பொறுப்பிலே உள்ளது. நீதிமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி இவர்களை விடுவிக்கும் முறை எதுவும் கிடையாது. நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவில் நிரபராதிகளாக நிரூபணமானால் அவர்கள் விடுவிக்கப்படுவர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த 229 கைதிகளையும், சிறைச்சாலை அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதற்கமைய அவர்களுடன் தொடர்புடைய வழக்கு கோவைகள் ஒரு மாதத்திற்குள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படும். இவர்களிடையே உள்ள அங்கவீனர்கள் புலிகளுக்காக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாலே அங்கவீனமடைந்தனர். இவர்கள் அப்பாவி அங்கவீனர்களல்ல. மோசமான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டே இவர்கள் அங்கவீனமுற்றனர். சம்பந்தன் எம்.பி. கூறுவது போல இவர்களை இலகுவாக விடுவிக்க முடியாது.
இரா சம்பந்தன்
தமிழ் கூட்டமைப்பின் தலைவர்
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 179 கைதிகளும், வவுனியா சிறைச்சாலையில் 33 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் 22 கைதிகளுமாக மொத்தம் 243 தமிழ் அரசியல் கைதிகள், தம்மை விடுவிக்கக் கோரி சுமார் எட்டு நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2009ம் ஆண்டு மே மாதம் படையினரிடம் சரணடைந்து சிறை வைக்கப்பட்டுள்ள இவர்களில் பலர் உடல் அங்கங்களை இழந்தவர்கள். எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாத நிலையிலேயே இந்த தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தம்மை விடுதலை செய்யக் காரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளினதும் உயிர்களை பாதுகாக்க அரசு உறுதியான பதிலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரஜைகள் முன்னணியின்
தலைவர் ஸ்ரீரங்கா எம்.பி.
“பல கைதிகளை சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்துள்ளனர். ஆனால் இந்த நபர்களுக்கு பூரணமாக செயற்பட அனுமதி அளித்த தலைமைத்துவம் வழங்கிய கருணா அம்மான், கே.பி., பிள்ளையான் போன்றோர் சுதந்திரமாக உள்ளனர். அவர்களுக்கு நீர், உணவு வழங்கியவர்கள் 10,15 வருடங்கள் சிறையில் சந்தேகத்தின் பேரில் உள்ளனர். இது எவ்வகையில் நியாயம்? இவர்களை சிறையில் வைத்திருப்பதானால் கே.பி., கருணா அம்மான், பிள்ளையான் போன்றோரையும் உள்ளே எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு சட்டம் மற்றையவருக்கு இன்னொரு சட்டம் என்பதை நாம் நிராகரிக்கிறோம். கைதிகள் சிறையில் உள்ளனர். இறுதி யுத்தத்தில் தாங்கள் புலி என கூறி சரணடைந்தவர்களை அரசு புனர்வாழ்வளித்து விடுதலை செய்கிறது. ஆனால் புலி என்ற சந்தேகத்தில் கைது செய்தவர்களை சிறையில் வைத்துள்ளனர். இவர்களையும் புனர்வாழ்வு செய்யுங்கள் அல்லது நீதிமன்ற வழியில் வழக்குத் தொடரவும் அப்படியில்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். யுத்தம் முடிந்து இன்னமும் இவர்களை தடுத்து வைத்திருப்பது முறையற்ற செயலாகும்” எனத் தெரிவித்திருந்தார்.
புலிகள் இயக்கத்தின் கட்டளை தளபதியாக இருந்தவர்களுக்கு அமைச்சு பதவி வழங்கிய அரசாங்கம் சாதாரண போராளிகளையும், அப்பாவி இளைஞர்களையும் சிறையில் அடைத்து வைத்திருப்பதேன்? சரத் பொன்சேகா கைது செய்யப்படுவதற்கு பல காலத்திற்கு முன்பே கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பற்றி சர்வதேசம் மெளனம் காப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
யுத்தத்தை வெற்றி கொள்ள உதவிய இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் மெளனம் காத்து வருகிறது. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒருமாத காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருக்கிறது. அரசாங்கம் இந்த வாக்குறுதியை ஒரு மாத காலத்தினுள் நிறைவேற்றாவிடின் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மீண்டும் ஒரு மாத காலத்தில் சாத்வீக போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஸ்ரீரங்கா எம்.பி. அவர் கேட்டுக் கொண்டார்.
ஜனநாயக மக்கள் முன்னணி
தலைவர் மனோ கணேசன்
நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளாக, வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய அனைத்து பிரதேசங்களையும் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். அதேபோல இந்த பிரச்சினை தொடர்பான போராட்டங்களில், இன்று தமிழ் கட்சிகள் மாத்திரம் அல்லாமல் பல்வேறு தென்னிலங்கை முற்போக்கு கட்சிகளும், தொண்டு நிறுவன அணியினரும் பங்குபற்ற தொடங்கியுள்ளார்கள்.
அத்துடன் கொழும்பிலுள்ள சர்வதேச பிரதிநிதிகளும் இந்த பிரச்சினையில் இன்று விசேட அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். இந்த மாறிவரும் நல்ல சூழலை எவரும் மாசு படுத்திவிடக் கூடாது. எனவே இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் ஒருங்கிணைந்த சிந்த¨யும், செயல்பாடும் இருக்க வேண்டும். குறிப்பாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் விசேட அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
எனவே தற்போது நாம் முன்னெடுக்கும், இந்த தமிழ் கைதிகள் விவகாரம் தொடர்பில் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.
பா. அரியநேத்திரன் எம்.பி.
எங்களை தெரிவுக்குழுவில் பங்குபற்றவைப்பதற்கு முயற்சி செய்வோர் முடிந்தால் முதலில் நல்லெண்ண அடிப்படையில் 5 தமிழ் கைதிகளையாவது விடுதலை செய்துவிட்டு தெரிவுக்குழுவிற்கு அழைக்கட்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுள்ளது என்றும் எனவே கூட்டமைப்பு விரைவில் அரசாங்கம் அமைக்கவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் என கூறப்பட்டுள்ளது. யுத்தத்தை முன்னின்று நடத்திய சரத்பொன்சேகா விடுதலை செய்யப்பட்டுள் ளார். ஆனால் கடந்த பல வருடங்களாக எந்தவித விசாரணைகளும் இன்றி சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் கைதிகள் விடுவிக்கப்படாமலுள்ளனர். பேச்சுவார்த் தையில் ஈடுபடும் இரண்டு தரப்புக்களும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் அந்த வகையில் கூட்டமைப்பு தெரிவுக்குழுவு க்கு வரவேண்டும். என்றால் கடைசி தமிழ் அரசியல் கைதிகள் சிலரையாவது அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என அரியநேத்திரன் தெரிவித்தார்.
புளொட் தலைவர்
தர்மலிங்கம் சித்தார்த்தன்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஏற்கனவேவ பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்தி வந்தோம். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.
தேசிய நல்லிணக்கம் நாட்டில் உருவாக வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கத் தரப்பினரும் வலியுறுத்தி வருவதை நாம் வரவேற்கின்றோம்.
எனவே, இது தொடர்பில் அவதானம் செலுத்தி பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment