Tuesday, May 22, 2012

வவுனியா உண்ணாவிரதப் போராட்ட சிறைக் கைதிகள்:ஆனந்தசங்கரி,சித்தார்த்தன்- சந்திப்பு!

Tuesday, May, 22, 2012
இலங்கை::தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது தமக்குப் பிணை வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி வவுனியா விளக்கமறியல் சிறையிலும் நேற்றுடன் நான்காவது நாளாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இச்சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த புளொட் தலைவர் சித்தார்த்தன், வவுனியா விளக்கமறியல் சிறையில் தற்போது 30 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்தவர்களுள் மூவர் மிகவும் பலவீனமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றையவர்களை சந்தித்து அவர்களின் உடல்நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொண்டோம்.

அவர்கள் தமது கோரிக்கைகளில் மிகவும் திடமாக இருக்கின்றநிலையில் அவர்களின் உடல் நிலைமைகள் பலமிழந்து இருப்பதை காணக்கூடியதாக இருந்தது. தமது கோரிக்கைகளை உள்ளடக்கி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரின் பிரதியினையும் அவர்கள் எம்மிடம் ஒப்படைத்தனர். அவர்களின் கோரிக்கைகள் மற்றும் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்குமென்றும், அவர்களுக்கு சட்டத்தரணிகளின் உதவிகளைப் பெறும் விடயத்திலும் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்து வந்தோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment