Sunday, ,May, 27, 2012இலங்கை::இலங்கையில் நீண்டகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவிக்கின்றார்.
கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், அங்குள்ள இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் உரையாற்றியபோதே, இந்த கருத்தினை கூறினார்.
கல்முனை மாநகர சபை பிரதி மேயர் நிஸாம் காரியப்பரின் அழைப்பின்பேரில் அங்கு சென்றிருந்த அசோக் கே காந்தா, பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் கல்முனை நகர வர்த்தகர்கள் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
நல்லிணக்க முயற்சிகள் வெற்றியளிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இந்தியா விருப்பத்துடன் இருப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் இலங்கையின் இறைமைக்கு எவ்விதத்திலும் பாதிப்புகள் ஏற்படாத வகையிலேயே இந்தியா ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, இலங்கையின் இறைமைக்கு இந்தியா மதிப்பளிப்பதுடன், நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான வரலாற்று ரீதியான சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளதாக அசோக் கே. காந்தா மேலும் குறிப்பிட்டார்.
மட்டுவில் பல்வேறு தரப்பினருடன் இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்
மட்டக்களப்பு விஜயத்தில் நேற்று ஈடுபட்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஆயர் தலைமையிலான சமயங்களின் சமாதானத்துக்கான ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்துள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அசோக் கே காந்தாவுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் ஆகியன குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் நீண்டகாலமாக விசாரணைக்காக காத்திருக்கும் கைதிகள் விவகாரம் காணிப் பிரச்சினைகள் முஸ்லிம்களின் சமய ஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை போன்ற விடயங்கள் குறித்தும் இந்த பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் மலரஞ்சலி செலுத்தினார்.
இந்திய உயர்ஸ்தானிகரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீத்தா பிரபாகரன் ஆகியோர் இதன்போது வரவேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment