Wednesday, May 23, 2012

புத்தளம் ஆனமடுவவில் வர்த்தகரின் கொலை தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் கைது!

Wednesday,May, 23, 2012
இலங்கை::புத்தளம் ஆனமடுவவில் இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை தொடர்பாக மேல் மாகாண சபையின் ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினரான துஷாரா பெரேராவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

வத்தளையில் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட வர்த்தகருடன் இணைந்து இம்மாகாண சபை உறுப்பினர் வர்த்தகமொன்றில் ஈடுபட்டார். இவர்கள் நீரிழிவு நோய்க்காக பயன்படுத்தப்படும் சுதேச மருந்தொன்றை ஏற்றுமதி செய்தனர்.

இவ்வர்த்தகருடன் ஏற்பட்ட மோதலையடுத்து அவரை கொலை செய்வதற்காக இராணுவத்திலிருந்து தப்பிவந்த மூவரை சந்தேக நபர் நியமித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கொலையின் பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், மேற்படி அரசியல்வாதியின் தொடர்பை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேற்படி மாகாண சபை உறுப்பினரை புத்தளம் நீதவான் முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆஜர்படுத்தவுள்ளனர்.


மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவன் தற்கொலை!

ஆணமடுவ பகுதியில் கூரான ஆயுதத்தால் தனது மனைவியைக் குத்திக் கொலை செய்து, ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

48 வயதான தனது மனைவியை, சந்தேகநபர் கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபரும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

58 வயதான ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment