Thursday, May 31, 2012

புலிகளின் தோல்விக்கு கிழக்கு முஸ்லிம்களின் மீதான தாக்குதல் முக்கிய காரணமாகும் – மாகாண சபை உறுப்பினர் ஜவாத்!

Thursday,May,31,2012
இலங்கை::வடக்கு எப்போது கிழக்கை இழந்ததோ அன்றிலிருந்து யுத்தத்தில் தோல்வியுற்றது. புலிகள் கிழக்கு முஸ்லிம்களை தாக்கித் துன்புறுத்தினார்களே அந்த வரலாற்றுத் தவறும் அவர்களின் தோல்விக்கு ஒருகாரணமாகும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா யூத் பரிமாற்று வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு நான்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது,

இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமானதே தவிர, யாரும் பௌத்தர்களுக்குச் சொந்தமானது என்று கூறிவிட முடியாது. நாம் பெற்றிருக்கின்ற மார்க்கம்தான் வேறு இடத்திலிருந்து வந்தது. யாரும் தனிப்பட்ட உரிமை கோராமல் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற போதுதான் உண்மையான சுதந்திர வாழ்வு பிறக்கும்.

கிழக்கு மாகாணம் ஒரு முக்கியமான பிரதேசம். இங்குள்ள இளைஞர்களிடம் வீராப்பு, விவேகம், துடிப்பு குடி கொண்டிருக்கும். அதையாராலும் மாற்ற முடியாது. அவற்றை சரியாக வழிநடாத்தி இளைஞர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகாண முனைய வேண்டும். தனது இலக்கை தூரமாக்கி மிக நீண்ட ஓட்டப்பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு இளைஞன் தான் ஒரு அரசியல்வாதியாக வர வேண்டும் என ஆசைப்படுவதைவிட ஜனாதிபதியாக வரவேண்டும் என்று நினைக்க

வேண்டும். அத்துடன் கடின உழைப்பும் வேண்டும். அப்போதுதான் நமது இலக்கை அடைய முடியும். திட்டமிடப்படாத எந்த முயற்சியும் வெற்றியளிக்காது.

இங்கு வந்துள்ள மேட்டுக்குடி வாசிகளான கண்டிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறந்த குணநலன்களை கொண்டவர்கள். அவர்களிடமிருந்து நாம் படிப்பினை பெறுவதோடு, எமது கிழக்கு மண்ணின் மகிமையையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

கல்முனை உவெஸ்லி என்ற தமிழ் பாடசாலையில் படித்த பெருமையும், யாழ்ப்பாணத்திற்குச் சென்று கல்வி கண்ட பெருமையும் என்னிடமுள்ளது. இவ்வாறு, எமது நாட்டின் எல்லா இடங்களுக்கும் இளைஞர்களாகிய நீங்கள் சென்று பல்வேறு அனுபவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் மிக இக்கட்டான வயதுப்பருவத்தில் நீங்கள் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். மிகக்கவனமாக நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். காதலைப்பற்றி இங்கு கூறப்பட்டது. சிறுவர்கள் தொட்டு முதியவர்கள் வரை மனிதர்களுக்குள்ளும் உலகிலும் உள்ள காதலினால்தான் இன்று உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. உணர்வுகளுக்குள் இருந்தால் அது காதலாக இருக்கும். உணர்ச்சிகளுக்குள் போனால் அது காமமாக மாறிவிடும். நீங்கள் இப்போது இருக்கின்ற பருவம் உணர்வுகளும் உணர்ச்சிகளும் கலக்கின்ற ஒரு பொல்லாப்பான காலமாகும். காதல் உணர்ச்சிகளுக்குள்ளாகி காமமாகி விடக்கூடாது. அப்படியான நிகழ்வுகளோடு சங்கமித்த நிலையில்தான் நானும் இங்கு பேசிக் கொண்டிருக்கின்றேன். நான் ஒரு சிறந்த தகப்பனாக இருக்க வேண்டும் என்று நினைத்து நடந்திருக்கின்றேன்.

இளைஞர்களின் இந்த பயணத்துக்கான வாய்ப்பைப் பயன்படுத்தி எமது பிரதேசமும் மக்களும் சிறந்தவர்கள் என்ற மனப்பதிவை இவர்கள் கொண்டு செல்லும் வகையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். என்றார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக மதகுருமார்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட, மாகாணப் பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment