Thursday, May 31, 2012

சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் சம்பந்தன் கலந்துரையாட மாட்டார் – தமிழ் அரசுக் கட்சி!

Thursday,May,31,2012
இலங்கை::இலங்கை தமிழரசுக்கட்சி மாநாடு முடிந்ததும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதத்திற்கு அவரை சந்தித்து கலந்துரையாட வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்திருந்தார்.

ஆனால் மாநாட்டிற்கு முன்னரும், மாநாட்டு அன்றும் இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட அந்த குழப்ப நிலையை அவதானித்த தலைவர் சம்பந்தன் தான் நினைத்ததிலிருந்து நீங்கிக்ககொண்டார் என இலங்கை தமிழரசுக்கட்சியினால் நேற்று (29.5.2011) மாலை மட்டக்களப்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்பரன் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் எவரையும் அழைத்து பேச தயாராக இருக்கின்றோம். தமிழ் அரங்கத்தை கூட சம்பந்தன் அழைத்துப்பேசினார். முன்னர் சம்பந்தன் முதலமைச்சருடன் பேச தீர்மானித்திருந்தார், அந்த நிலையிலேயெ மாநாடு வந்தது. மாநாடு முடியும் வரை எதிர் பார்திருந்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் இப்போது கூறுகின்ற வடக்கு கிழக்கு இணைப்பு சார்பாக கதைத்திருப்பேன் அதற்கத்தான் சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பினேன், அவர் தன்னுடன் கதையாததன் காரணமாகத்தான் மாநாட்டில் பிரதேசவாதத்தை காட்டினேன் என்று அவர் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. அது முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்று வெறும் பொய்யாகும்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டை குழப்புவதற்கும் கறுப்புக்கொடிகளை கட்டுவதற்கும் காரணமாக இருந்தவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினராகும்.

இந்த மாநாடானது மட்டக்களப்பு மக்களுக்கு இன்னுமொரு வகையில் பெரும் எழுச்சியை கொடுத்திருக்கின்றது. இலங்கை தமிழரசுக் கட்சிதான் எங்கள் தாய்க்கட்சி என்பதனை தமிழ் மக்களுக்கு உணரச் செய்துள்ளது.

இந்த மாநாட்டுக்கு பல இடங்களிலிருந்து மக்கள் வருகை தந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பெருமளவிலான மக்கள் வருகை தந்து கலந்து கொண்டனர். மாநாட்டை ஒழுங்கு செய்யும்போது பல இடங்களிலிருந்தும் பல விதமான துண்டுப்பிரசுரங்கள் வெளிவந்தன. குறிப்பாக எமது மாவட்டத்தில் பிரதேச வாதத்தை தமது ஆயுதமாக கொண்டு கடமையாற்றும், மக்களை ஏமாற்றும் சிலர் அந்த துண்டுப்பிரசுரங்களுக்கும் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் கூறுகின்ற விடயங்களை விதைத்திருந்தார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் பெரிய மாநாட்டை நடாத்தினர். அவர்களின் மாநாட்டிற்காக சிங்கள மக்களை பொலனறுவையிலிருந்து அம்பாறையிலிருந்து பஸ் வண்டிகளில் ஏற்றி பறித்தார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களை பஸ் வண்டிகளில் ஏற்றிப்பறித்தர்கள். மாநட்டுக்கு சில தினங்களுக்கு முன்னர் மாதர்சங்கங்களுக்கு தைய்யல் இயந்திரங்கள், சீலைகள் விநியோகிக்கப்பட்டு அழைத்து வந்தார்கள். அதிகாரிகளை கட்டாயப்படுத்தி அழைத்தார்கள். அவ்வாறு அந்த மாநாட்டை நடாத்தினார்கள், இந்த வகையில் அவர்களின் மாநட்டை நாங்கள் குழப்பச்செல்லவில்லை.

மாநாடு நடாத்துவது அவர்களின் ஜனநாயகம், நாங்கள் அவர்களுக்கெதிராக ஒரு பிரசுரமும் நாங்கள் ஒட்டவில்லை. ஜனநாயகத்தை என்றும் நாங்கள் மதிப்பவர்கள் அந்தக்கட்சிக்கு ஜனநாயக உரிமை இருக்கின்றது, அவர்களின் அந்த மாநாட்டில் கூட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உரையாற்றும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உங்கள் வீடுகளுக்கு வந்தால் ஈக்கில் கட்டுக்களை காட்டுங்கள் என கூறினார். அதற்கு கூட நாங்கள் துண்டுப்பிரசுரம் வெளியிடவில்லை.

அது அவர்களின் ஜனநாயக உரிமை அதற்கு மக்கள் தேர்லில் பதில் கொடுப்பார்கள். எங்களது மாநாட்டை குழப்ப நடவடிக்கை எடுத்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினிரிடம் அன்பாக கேட்கின்றேன், ஜனநாயக ரீதியாக எங்களோடு எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு உங்கள் ஆசனங்களை கைப்பற்றுங்கள் அதுதான் உங்களுக்கு வெற்றி. எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் உங்கள் திறமைகளை காட்டி அதில் நீங்கள் வெற்றி பெற்றால் மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள் என நிருபிக்கப்படலாம்.

ஜனாதிபதி அவர்களிடம் சென்று இவ்வருடம் பங்குனி மாதத்தில் கலைய வேண்டிய பிரதேச சபை, மட்டக்களப்பு மாநகர சபை ஆகியவைகளை நீடிக்கச்சொல்லுவீர்களா என நான் கேட்கின்றேன். ஏன் இவற்றை நீடிக்கச்சொன்னீர்கள் மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகள் அத்தனையும் தமிழ் மக்கள் விடுதலைபபுலிகள் கட்சியிடமுள்ளன மட்டக்களப்பு மாநகர சபை அரசாங்க கட்சியிடம் இருக்கின்றது.

துணிச்சல் இருந்திருந்தால் அந்த தேர்தலை நடாத்தியிருக்கலாம். அத்தனை இடங்களையும் நீங்கள் கைப்பற்றியிருப்பீர்களாக இருந்திருந்தால் இந்த மட்டக்களப்பு மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை நேசிக்கின்றார்கள் என்பது சர்வதேசத்திற்கு விளங்கக் கூடியதாக இருந்திருக்கும்.

தேர்தலில் எல்லாம் உங்களுக்கு வங்குரோத்து, ஆனால் மானமுள்ள தமிழர்கள் என துண்டுப்பிரசுரம் உங்களுக்கு இந்த நிலைமையில் தான் இவர்கள் நடந்து கொள்கின்றனர். யார் மானமுள்ள தமிழர்கள் ஒரு காலத்திலே கறுப்புச்சீலையை கண்ணிலும் முகத்திலும், தலையிலும் கட்டிக்கொண்டு திரிந்தவர்கள், அந்த சீலையை இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் கறுப்புக்கொடியாக கட்டுகின்றனர். இவர்கள் ஜனநாயக வழிக்கு வரவேண்டும்.

யுத்தம் முடிவுக்குவந்த பின்னர் ஜனநாயம் ஏற்பட்டு விட்டது என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் இல்லை என்பதற்கு நாங்கள் நடாத்திய மாநாட்டுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஏற்படுத்திய குந்தகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் அதன் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு நடந்திருக்குமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அந்தளவு மக்கள் வெள்ளம் சம்பந்தனை வரவேற்றனர்.

இங்கு கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தெரிவித்தார்,

பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாடு வெற்றியை தந்துள்ளது இந்த மாநாட்டுக்கு அச்சுறுத்தல்கள் எவ்வளவு இருந்தாலும் மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றார்கள் என்பதை இந்த மாநாடு உணர்த்தியுள்ளது உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மாநாட்டுக்கெதிராக கறுப்புக்கொடிகளை கட்டினார்கள் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார்கள் 26ம் திகதி நல்லிரவில் சில மூல வெடிச்சத்தங்கள் கேட்டன. இவை அனைத்தக்கும் காரணம் இந்த மாநாட்டுக்கு வரும் மக்களை பயமுறுத்தல் செய்து இந்த மாநாட்டில் மக்களை கலந்து கொள்ளாமல் செய்கின்ற ஒரு நோக்கமாக இருந்தது.

அது மட்டுமல்லாது பொய்ச்செய்திகளை பரப்பி மக்களை பயமுறுத்தல் செய்கின்ற நடவடிக்கைளிலும் கூட இவர்கள் செயல்பட்டிருந்தார்கள். உதாரணமாக பொலிசாருக்கு பல தகவல்கள் கிடைத்தன குறிப்பாக மாநாட்டு மண்டபத்தினுள்ளேயே குண்டு இருக்கின்றது என்ற செய்தி கூட கிடைத்திருந்தது. ஆனால் அது அப்பட்டமான பொய் என்று பொலிஸ் தரப்பு மட்டு மல்ல நாங்களும் உணர்ந்திருந்தோம் அதன் நோக்கம் மண்டபத்தினுள் குண்டு உள்ளது என்று சொன்னால் மக்கள் அதை அறிந்து கொண்டால் முண்டியடித்துக்கொண்டு போக வேண்டி ஏற்படும் அதனால் இந்த மாநாட்டை குழப்பி விடலாம் என்ற ஒரு அங்கலாய்ப்பு இருந்தது.

அந்த மண்டபத்தை மக்கள் வந்து கூடுவதற்கு முன்னர் பொலிசார் சோதணை செய்திருந்தார்கள் இவ்வாறு மக்களை எவ்வாறாவது மாநாட்டுக்கு செல்வதை தடை செய்யலாம் என்பதிலே அவர்கள் செயல்பட்டிருந்ததை நாங்கள் கண்டோம்.
இந்த மாநாட்டில் இவ்வளவு அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள் என்று சொன்னாள் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

அவர்கள் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் ஏன் இந்த மாநாட்டை இங்கு நடாத்த வேண்டும் என்று கூட கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் காலத்துக்காலம் மாநாட்டை கூட்டி நிருவாகத்தை புதுப்பித்து கணக்கறிக்கைகள் காட்டி அவற்றை தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்ப வேண்டும். இவற்றைக் கூட அறியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

ஏன் வடக்கிலிருந்து தலைமை தாங்க வரவேண்டும் கிழக்கிலிருந்து லோகேஸ்பரன் தலைமை தாங்கி இதை நடாத்தலாமே என்றும் கூட ஒரு துண்டுப்பிரசுரத்தில் எழுதப்பட்டிருந்தது. எம்மைப்பொறுத்தவரையில் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற வடக்கு கிழக்கிலே முற்றுமுழுதாக பல கிளைகளை கொண்ட ஒரே அரசியல் கட்சி இந்த தமிழரசுக்கட்சி என்பதை மக்கள் அறிவார்கள்.

இந்த 14வது தேசிய மாநாட்டின் பொதுச்சபை கூட்டத்தில் முற்றுமுழுதாக 160 அங்கத்தவர்களும் கலந்து கொண்ட ஒரே ஒரு மாநாடு இந்த மட்டக்களப்பிலே நடைபெற்ற 14வது மாநாடு என்பதை நாங்கள் நிச்சயமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

ஒரு தொகுதிக்கு ஐந்து பேர் என்ற அடிப்படையில் பொதுச்சபை அங்கத்தவர்கள் 160 பேர் உள்ளனர். அந்த 160 பேரும் 26ம் திகதி நடை பெற்ற பொதுச்சபை கூட்டத்திலே கலந்து கொண்டார்கள் என்றால் எங்களுக்கு இந்த மாநாடு நுறு வீதம் பூரண வெற்றியளித்த மாநாடு என்று கூறுகின்றோம். 13வது மாநாடு 2010ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற போது இந்த பொதுச்சபை 160 உறுப்பினர்களில் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவில்லை. முழு நிறைவு இந்த மட்டக்களப்பு மாநாட்டில்தான் இருந்தது என்பதை நான் நிச்சயமாக சொல்ல வேண்டியுள்ளது. அந்தளவு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இந்த மாநாட்டை திருப்திகரமாக நடாத்தியிருக்கின்றோம்.

மற்றவர்களை போல ஆசை வார்த்தைகளை கூறி மக்களை மாநாட்டுக்கு அழைத்து வந்தவர்கள் நாங்களல்ல. கறுப்பு கொடிகளை கூட மக்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஏன் கறுப்புக்கொடி கட்டினார்கள் என்று ஆராயவில்லை. ஏனென்றால் அதை கட்டியவர்கள் யார் என்பது அந்த மக்களுக்கு புரிந்திருந்தது. மாநாட்டுக்கெதிரான துண்டுப்பிரசுரங்கள் பத்து பண்ணிரெண்று என்று வந்திருந்தாலும் கூட இது ஒருவரிடமிருந்துதான் அத்தனை துண்டுப்பிரசுரமும் வந்திருந்தது என்பதை மக்கள் உணர்ந்திருந்தார்கள்.

இந்த துண்டுப்பிரசுரங்களையோ கறுப்புக்கொடிகளையோ மக்கள் பெரிதாக அலட்டிக்கொல்லவில்லை என்பதுதான் உண்மை. நாங்கள் எந்தவித போக்குவரத்தும் ஏற்பாடு செய்யாமல் கூடிய மக்கள் அந்த மக்கள் என்பதை கூறி வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். அவர்கள் எதற்காக ஆசைப்பட்டும் வரவில்லை. வேஷ்ட்டிக்காகவோ சேலைக்காகவோ அவர்கள் ஆசைப்பட்டு இங்கு வரவில்லை. உணர்வின் நிமித்தம் தமிழன் என்கின்ற உணர்வின் காரணமாக வந்தார்களே தவிர வேறு எதற்காகவும் அவர்கள் வரவில்லை என்பதை தெளிவாக கூறவிரும்புகின்றேன்.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பி.அரிய நேந்திரன் இந்த மாநட்டிற்கெதிராக பல வீதமான அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் துண்டுப்பிரசுர மூலமான அச்சுறுத்தல், சுவரொட்டிகள் மூலமான அச்சுறுத்தல், கறுப்புக்கொடிகளை கட்டிய அச்சுறுத்தல், மாநாடு நடை பெறயிருந்த மண்டபத்திற்கு தீ வைத்தது ஒரு அச்சுறுத்தல், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பஸ் வண்டி மீது தாக்குதல் நடாத்திய அச்சுறுத்தல், களுதாவலையிலிருக்கக் கூடிய எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணகசபையின் வாகணத்திற்கு பெற்றோல் குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது. இவர் இங்கு மாநாட்டில் இருந்து கொண்டிருக்கும் போதே அந்த குண்டுத்தாக்குதல் நடாத்திய குழு, இந்த மாநாட்டு குழுவிலிருந்த பலருக்கு தொலை பேசி மூலமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது அதன் இலக்கங்கள் கூட எம்மிடமுள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொடுத்துள்ளோம். ஆதரவாளர்கள் வரும் போது மாநாட்டுக்கு செல்ல வேண்டாமென அச்சுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வந்திருப்பதென்பது ஒரு புதிய விடயமல்ல. இலங்கையில் 63 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. அதில் இலங்கை தமிழரசுக்கட்சியும் ஒன்றாக உள்ளது. யாராவது எந்த விடயத்தையும் ஜனநாயக ரீதியாக எதிர்ப்புக்காட்டக்கூடிய ஒரே ஒரு கட்சியாக இலங்கை தமிழரசுக்கட்சி என்பதை மீண்டுமொரு முறை அது நிருபித்துள்ளது.

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யாராவது கொடும்பாவி எரிக்கலாம். நாங்கள் தட்டிக்கேட்க மாட்டோம். எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கறுப்பு துணி காட்டமுடியும். அதை நாங்கள் தடுக்க மாட்டோம். எங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எங்கள் கட்சி ஆதரவாளர்கள் கல்லால் கூட எறியலாம் அவர்கள் ஆதரவாளர்களை கூட தாக்கலாம் ஏனென்றால் நாங்கள் ஜனநாயக ரீதியாக தந்தை செல்வாவின் வழியில் வந்த இந்தக்கட்சிக்கு இவ்வாறான நடவடிக்கைகள் செய்ய முடியும்

ஆனால் இதே நேரத்தில் வேறொரு கட்சிக்கு நடவடிக்கைகள் செய்தால் எந்த விளைவு வரும் என்பது அதில் தான் ஜனநாயகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாநாடு வெற்றிகரமாக முடிவுற்றுள்ளது. இந்த நாட்டின் மூலம் இன்னுமொரு செய்தியும் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஜனநாயகம் எந்தளவில் மட்டக்களப்பில் மதிக்கப்பட்டுள்ளது என்பதை வேறுவார்த்தையில் நாங்கள் சொல்லத் தேவையில்லை.

இலங்கையில் இப்பொழுது உள்ள சூழ் நிலையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டுமென்பதை துனிச்சலுடன் தட்டிக்கேட்கின்ற ஒரு கட்சியாக எங்களது கட்சி வளர்ந்திருக்கின்றது. ஜனநாயக ரீதியாக போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு கட்சிக்கு ஒரு தமிழ் பிரதேசத்திலே இன்னொரு தமிழ் குழுவினால் ஒரு அழுத்தம் வருவதென்பது உண்மையிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் இதை பார்க்க வேண்டியுள்ளது என நான் கருதுகின்றேன்.

இவ்வாறான இவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைப்பற்று நாங்கள் கவலைப்படவில்லை. பீதியடைவில்லை மகிழ்ச்சியடைகின்றோம், ஏனென்றால் ஒரு ஜனநாயகக் கட்சி ஜனநாயகத்தில் வளர்ந்திருக்கின்றது ஜனநாயகத்தை பேனிப்பாதுகாக்கின்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் இந்த 14வது மாநாடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நடைபெற்றது. இந்த மாநாடு என்பது இராஜதந்திர ரீதியாக எமத விடுதலைப்பயணம் சென்றதற்கு பிற்பாடு இடம் பெற்ற ஒரு மாநாடாகும்.

இந்த மாநாட்டுக்கு உதவியவர்கள் பலர் பொருளாதார ரீதியாக உதவியவர்கள் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த சகோதரர்கள், மட்டக்களப்பைச் சேர்ந்த புலம் பெயர்ந்தவர்கள் இதற்கு உதவியுள்ளார்கள். அதே போன்று பல இன்னல்களுக்கு மத்தியல் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்தவர்கள் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் அத்தோடு ஊடகங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம்.

இனியாவது ஜனநாயகம் மதிக்கப்படல் வேண்டும் ஜனநாயகத்திற்குப்பின்னால் மக்கள் அணி திரளவேண்டும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment