Thursday, May 17, 2012

ராணுவ தளபதி குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடைக்காமல் சிபிஐ திணறல்!

Thursday, May 17, 2012
புதுடெல்லி::தரம் குறைந்த வாகனங்கள் வாங்க ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்ததாக ராணுவ தளபதி வி.கே.சிங் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கிடைக்காததால் சிபிஐ திணறி வருகிறது. ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், தான் தளபதியாக பதவியேற்றவுடன் தரமற்ற டெட்ரா வாகனங்கள் வாங்க ஒப்புதல் அளித்தால் ரூ.14 கோடி அன்பளிப்பு வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங் ஆசை காட்டினார் என குற்றம்சாட்டினார். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் அப்போது புகார் கூறியதாகவும் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப்புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில் ராணுவத்துக்கு டெட்ரா வாகனங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தனியாக சிபிஐ விசாரணை நடத்தியது.

டெட்ரா வாகனத்தை ராணுவத்துக்கு சப்ளை செய்யும் பிஇஎம்எல் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ், பிஇஎம்எல் நிறுவனத்துக்கு டெட்ரா வாகன பாகங்களை சப்ளை செய்யும் வெக்ட்ரா நிறுவனத்தின் தலைவர் ரிஷி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அவர்களது வீடுகள் மற்றும் ஒரு சில ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் வி.கே.சிங்கின் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வி.கே.சிங்கிடமும், தேஜிந்தர் சிங்கிடமும் விசாரணை நடத்தியது. வி.கே.சிங்கை, தேஜிந்தர் சிங் சந்தித்ததற்கான ஆதாரம் தவிர வேறு எந்த ஆதாரமும் சிபிஐக்கு கிடைக்கவில்லை. இருவரும் பேசியதற்கான ஆடியோ அல்லது வீடியோ ஆதாரம் எதையும் வி.கே.சிங் தரவில்லை. வி.கே.சிங் தெரிவித்த குற்றச்சாட்டுகளை தேஜிந்தர் சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார். வி.கே.சிங் குற்றச்சாட்டை கோர்ட்டில் நிரூபிக்க அவரது சாட்சியம் தவிர மற்றொரு சாட்சியமும் தேவை. இதுபோல் எந்த சாட்சியமும் இதுவரை சிபிஐக்கு கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment