Saturday, May, 19, 2012புதுடெல்லி::5 நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்தின்போது, அமெரிக்க பெண்ணை பெங்களூர் அணி வீரர் லூக் முத்தமிட முயற்சி செய்த பரபரப்பு சம்பவம் நடந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அந்த வீரரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
தொடர் சர்ச்சைகள்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. `ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 வீரர்கள் கடந்த 15-ந் தேதி சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த நாள் (16-ந் தேதி) மும்பை வான்கடே மைதானத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிபரும், நடிகருமான ஷாருக்கான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சர்ச்சைகளின் சுவடுகள் மறைவதற்கு முன்னால் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த விருந்து ஒன்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் லூக், பெண் ஒருவரை முத்தமிட முயன்ற விவகாரம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
மது விருந்து
டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். லீக் போட்டி ஒன்றில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்கடித்தது. இதையடுத்து பெங்களூர் அணி வீரரான, ஆஸ்திரேலியாவை சேர்ந்த லூக் போமர்ஸ்பச்சுக்கு, அமெரிக்காவை சேர்ந்த ஜோஹல் ஹேமந்த் என்ற இளம்பெண் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்து கொடுத்தார்.
இந்த விருந்தில் அந்த பெண் திருமணம் செய்து கொள்ளப்போகிற மும்பை வாலிபர் சகீல் ஜாதாவும் பங்கேற்றிருந்தார். விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, விருந்து தந்த இளம் பெண்ணை லூக் முத்தமிட முயன்றார். இதைத் தடுத்த அந்த பெண்ணின் வருங்கால காதல் கணவரை லூக் சரமாரி தாக்கினார். இந்த சம்பவத்தால் அந்த ஓட்டலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், டெல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லூக் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, லூக்கை நேற்று கைது செய்தனர்.
விரசப் பார்வை
சம்பவத்தின்போது நடந்தது என்ன என்பது குறித்து பாதிக்கப்பட்ட பெண், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நானும், என் வருங்கால காதல் கணவரும் இன்னும் சில நண்பர்களும் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தோம். இந்த நிலையில், அங்கு மது விருந்து நடந்தது.
இந்த மது விருந்தின்போது அவர் (லூக்) எங்களோடு சேர்ந்து கொண்டார். நாங்கள் அவரோடு சேர்ந்து மது குடிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். அவர் என் காதலரிடம் ஏதோ சொன்னார். அது எனக்கு பிடிக்கவில்லை. விரசம் கலந்த அவரது பார்வையும் எனக்கு பிடிக்காமல் போயிற்று.
முத்தம் தர முயன்றார்
இருந்தாலும், என் காதலரிடம், `நீங்கள் விரும்பினால் அவருடன் மது குடிக்கலாம்' என கூறினேன். அதைத் தொடர்ந்து நான் என் அறைக்கு செல்லத் தயார் ஆனேன்.
அந்த நேரத்தில் லூக் என்னைப் பின்தொடர்ந்து வந்து என் கையைப் பிடித்துக்கொண்டு, முத்தமிட முயற்சித்தார். உடனே என் காதலர் அவரிடம், `இதோ பாருங்கள், அவள் அத்தகைய பெண் அல்ல. அவளை விட்டு விட்டு பேசாமல் உங்கள் அறைக்கு போய் விடுங்கள்' என்று கூறினார்.
உடனே லூக் என் காதலர் பக்கம் திரும்பி, அவரை சரமாரி தாக்க ஆரம்பித்தார். அவரது முகத்தில் குத்து விட்டார். அவருக்கு ரத்தம் வந்தது. உடனே என் காதலரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்தேன். அந்த புகாரை நான் திரும்பப்பெற வேண்டும் என்று எனக்கு நிர்ப்பந்தங்கள் வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.பி.எல். என்ன செய்யும்?
இந்த நிலையில் சம்பவம் குறித்து ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
இது தனிப்பட்ட ஒரு வீரரின் தவறான நடத்தை தொடர்பான சம்பவம் ஆகும். தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். போட்டிகளில் அதிகாரப்பூர்வ இரவு விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. எனவே சம்பவம் நடந்த விருந்து, ஐ.பி.எல்.லின் அதிகாரப்பூர்வ விருந்து அல்ல. நாங்கள் அதிகாரப்பூர்வ விருந்துகளை விட்டு விட்டோம். எனவே ஓட்டலில் நடந்த தனிப்பட்ட விருந்தில் நடந்த சம்பவம் தொடர்பாக ஐ.பி.எல். செய்வதற்கு ஒன்றும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அணியில் இருந்து நீக்கம்
சம்பவம் தொடர்பாக பெங்களூர் அணியின் அதிபர் விஜய் மல்லையா நிருபர்களிடம் பேசுகையில், "எங்கள் அணி வீரர் தொடர்பான சம்பவம் பற்றிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. விசாரணை அதிகாரிகளுக்கு எங்கள் அணி நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும். அவர் பெங்களூர் அணியில் தொடர்ந்து இடம் பெற மாட்டார்'' என்றார்.
இடைக்கால ஜாமீன்
கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் லூக், பாட்டியாலா கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு இன்று (சனிக்கிழமை) பிற்பகல் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment