Thursday, May 17, 2012இலங்கை::ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் மற்றும் அனோமா பொன்சேகா ஆகியோர் நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு டிரான் அலஸ்ஸின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
நிபந்தனையற்ற விடுதலையையே எதிர்பார்க்கிறோம்-அனோமா பொன்சேகா!
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக தான் இன்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவிக்கின்றார்.
இதன்போது சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் உள்ள ஒருசில பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இணக்கப்பாடுகளை எட்டும் நோக்கில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு மிக விரைவில் அவரை விடுவிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதே டிரான் அலஸ் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
ஏதேனுமொரு நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்படுவரா என ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸிடம் இதன்போது வினவப்பட்டது.
எந்த நிபந்தனைகள் குறித்தும் நாம் கலந்துரையாடவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நாம் தவறு செய்யவில்லை என்பதையே அன்றிலிருந்து இன்று வரை கூறிவருகிறோம் என அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதனால் நிபந்தனையற்ற விடுதலையையே நாம் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்ட அவர், எனினும் இறுதியில் என்ன இடம்பெறும் என்பது தொடர்பில் நம்பிக்கை இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment