Friday, ,May, ,25, 2012சென்னை::ஐபிஎல் சீசன் 5ன் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் பிளே ஆப் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் , டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இன்று கைகலக்கின்றன. கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குவாலிபயர் 1 ஆட்டத்தில் டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி ஏற்கனவே பைனலுக்கு முன்னேறிவிட்டது. மும்பை , சென்னை அணிகளிடையே நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் சென்னை அணி அபாரமாக வென்று அடுத்த பிளே ஆப் சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
பைனலுக்கு முன்னேறும் அணியை தீர்மானிப்பதற்கான முக்கியமான ஆட்டத்தில் (அரை இறுதி), டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் , சேவக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, நாளை மறுநாள் நடைபெறும் பைனலில் கொல்கத்தா அணியுடன் மோதும்.
ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் சொதப்பியதால், சென்னை அணி அதிர்ஷ்டவசமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை அணியை 38 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.
தொடக்கத்திலேயே 2 விக்கெட் சரிந்தாலும் பத்ரி , ஹஸி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை நிலைநிறுத்த, டோனி , பிராவோ ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளாசித் தள்ளி இலமாலய இலக்கை நிர்ணயித்தது. பின்னர் துல்லியமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால் மும்பையை திணறடித்த சென்னை வீரர்கள் அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராக உள்ளனர்.
லீக் சுற்றில் அபாரமாக விளையாடி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தாலும், கேப்டன் சேவக் , வார்னர் அதிரடி ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தால் மட்டுமே டேர்டெவில்சால் தாக்குப்பிடிக்க முடியும். இவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தால், டெவில்ஸ் மிரட்டல் எடுபடாது என்பதை சென்னை வீரர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளூரில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் சூப்பர் கிங்சுக்கு கூடுதல் சாதகம். வெற்றி அல்லது வெளியேற்றம் என்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பது உறுதி.
No comments:
Post a Comment