Thursday, May, 24, 2012இலங்கை::தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமான இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்யவேண்டும், அல்லது அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் , பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்...
அரசாங்கத்தின் உறுதிமொழிக்கிணங்க கைதிகளின் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு!
தடுப்புக் காவலிலுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு ஒருமாத காலத்தினுள் தீர்வு காண்பதாக நேற்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து கைதிகளின் உண்ணாவிரதம் ஒருமாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்...
“நாடாளுமன்றில் நேற்று அமைச்சர் கூறிய வாக்குறுதியை இன்று - கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளிடம் எடுத்துக் கூறினோம். என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான விநாயகமூர்த்தி மற்றும் ஸ்ரீதரன் ஆகியோரும் அங்கு வந்திருந்தனர். இந்த வாக்குறுதிகளை தாங்கள் எப்படி நம்புவது என்று கைதிகள் கேட்டார்கள். நாங்கள் கூறினோம் நீங்கள் வாக்குறுதியை நம்பி உண்ணாவிரதத்தை கைவிடத் தேவையில்லை. ஆனால், உங்கள் பிரச்சினைகளை ஒரு மாதகாலத்தில் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள். ஆகையினால் அந்த ஒரு மாத காலத்திற்காவது உங்களின் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டோம்.
நாங்கள் விடுத்த இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு விளக்கமறியல் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் தங்களது உண்ணாவிரதத்தினை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். இவர்களது முடிவினை ஏனைய சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கும் அறிவித்திருக்கிறோம். எனவே அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடைபெற்றுவரும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் தொடரும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமரந்திரன் மேலும் தெரிவித்தார்.
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, அவர்கள் குற்றமிருப்பின் வழக்கு தாக்கல் செய்யுமாறும் அல்லது விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது...
புலி என கூறி சரணடைந்தவர்களை அரசு புனர்வாழ்வளித்து விடுதலை செய்கிறது: ஆனால் புலி என்ற சந்தேகத்தில் கைது செய்தவர்களை சிறையில் வைத்துள்ளளனர்-.ஸ்ரீரங்கா!
தமிழ் அரசியல் சிறை கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைப்பதானால் கருணா, பிள்ளையான் மற்றும் கேபி ஆகியோரையும் தடுத்து வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று காலை முதல் வவுனியா நகர சபை மைதானத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வன் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு ஊடகவியலாளர்களில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா,
"பல அரசியல் கைதிகளை சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்துள்ளனர். ஆனால் இந்த நபர்களுக்கு பூரணமாக செயற்பட அனுமதி அளித்த தலைமைத்துவம் வழங்கிய கருணா அம்மான், கேபி, பிள்ளையான் போன்றோர் சுதந்திரமாக பாராளுமன்றில் உள்ளனர். அரச வீடுகளில் உள்ளனர். அவர்களுக்கு நீர், உணவு வழங்கியவர்கள் 10, 15 வருடங்கள் சிறையில் சந்தேகத்தின் பேரில் உள்ளனர். இது எவ்வகையில் நியாயம் என நாம் கேட்கிறோம். இவர்களை சிறையில் வைத்திருப்பதானால் கேபி, கருணா
அம்மான், பிள்ளையான் போன்றோரையும் உள்ளே எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு சட்டம் மற்றையவருக்கு இன்னொரு சட்டம் என்பதை நாம் நிராகரிக்கிறோம். கைதிகள் சிறையில் உள்ளனர். இறுதி யுத்தத்தில் தாங்கள் புலி என கூறி சரணடைந்தவர்களை அரசு புனர்வாழ்வளித்து விடுதலை செய்கிறது. ஆனால் புலி என்ற சந்தேகத்தில் கைது செய்தவர்களை சிறையில் வைத்துள்ளளனர்.
இவர்களையும் புனர்வாழ்வு செய்யுங்கள் அல்லது நீதிமன்ற வழியில் வழக்குத் தொடரவும் அப்படியில்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். யுத்தம் முடிந்து இன்னமும் இவர்களை தடுத்து வைத்திருப்பது மேலும் இனவாதத்தை தூண்டும் செயலாகும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment