Saturday, May 26, 2012

படையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது - இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்!

Saturday, ,May, ,26, 2012
இலங்கை::படையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளதாக இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தினரின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் மற்றுமொரு முயற்சியாக இந்த அறிக்கையை நோக்குவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத படுகொலைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும், துணை இராணுவக் குழுக்கள் இலங்கையில் இயங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீருடை தரித்த இராணுவத்தினர் மட்டுமே நாட்டில் ஆயுதம் ஏந்திக் கடமையில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்கும் படையினருக்கும் தொடர்பு இல்லை எனவும் அவ்வாறு தொடர்பு இருந்தால் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் அவற்றை சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட கனேடிய பிரஜையை படையினர் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இறுதியில் கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு இந்தக் கைது சிறந்த பதிலளித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment